உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம் திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும் வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.
வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக