சிறுவர் கல்வி தொடர்பாக அறிஞர்களின் கருத்துக்கள்

குழந்தைக் கல்விச் சிந்தனைகள்

ஜோன் கென்றி பெஸ்டலோசி
(1746 - 1826)

சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச்சிறப்புப் பெற்றவர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில்களின் படிப்படியான வளர்ச்சியும் அதனால் நிகழ்ந்த ஏழ்மையும், கல்வி நிராகரிப்புகளும் இவரின் கல்விச் சிந்தனைகளிலே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. ரூசோவின் இயற்பண்பு நெறி பெஸ்டலோசியின் மீது கருத்தியல் சார்ந்த நேர்நிலைகளையும் எதிர்நிலைகளையும் பிறப்பித்தது. ஐரோப்பிய சூழலில் அரும்பத் தொடங்கிய மக்களாட்சிச் சிந்தனைகள் அவருடைய கல்விச் சிந்தனைகளில் வலிதாக ஊடுருவி நின்றன.

இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார். ஸ்ரான்ஸ் ( Stanz), பேர்டோர்ப் ( Burgdorf), வேர்டன் (Yverdon) முதலாம் ஊர்களில் பரிசோதனைப் பள்ளிக் கூடங்களை நிறுவி தமது கோட்பாடுகளின் நடைமுறை நுட்பங்களையும் கண்டறிந்தார்.

பெஸ்டலோசி எழுதிய பின்வரும் நூல்கள் அவரது கல்வித் தரிசனத் தின் பரிமாணங்களைப் பலவகைகளில் விளக்குகின்றன.
1) ''எனது அனுபவங்கள்"
2) ''அன்னப் பறவையின் கீதம்"
3) ''ஒரு துறவியின் மாலைப்பொழுது"
4) ''லெனோர்ட்டும் யேர்ரூட்டும்"
5) ''கிறிஸ்தோப்பரும் எலியாவும்"
6) ''இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை"
7) ''யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்"

பெஸ்டலோசியின் கல்விச் செயல்முறையில் குடும்பத்தின் முக்கியத்துவம் மீள வலியுறுத்தப்படுகின்றது. அவரின் வாழ்நிலை அனுபவங்களே இந்த நிலைக்கு அடித்தளமிட்டன. அவர் பிறந்த சுவிற்சலார்ந்து சூரிச் நகரின் வாழ்க்கையிலும் குழந்தை வளர்ப்பிலும், கல்வியிலும் குடும்பங்கள் உன்னதமான இடத்தை வகித்தன. பெஸ்டலோசி சின்னஞ் சிறுவனாயிருக்கும் பொழுதே தமது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். கல்வி கற்பிப்பவர்களுக்குத் தாயின் குணவியல்புகள் அவசியமானவை என்பதை அவர் கண்டறிந்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டதும் இவரது கல்விப் பணிகள் ஏழை விவசாயக் குழந்தைகளைத் தழுவியதாய் அமைக்கப்பட்டன. 1764-ம் ஆண்டில் அநாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளுக்கென ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி செயல் அனுபவங் களை தழுவிய கல்வியை வழங்கினார்.
சிறுவர்க்கான கல்வியில் கைகளும், அறிவும், உணர்வும் என்ற முப்பொருள்களினதும் முக்கியத்துவத்தை விளக்கிய அவர் அவற்றுக்கு உரிய முறையிலே பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
செயல் அனுபவங்கள் இன்றிக் கற்றல், முயன்று தவறிக் கற்றல், இயற்கையை நம்பிய கற்றல் முதலியவற்றின் எதிர்மறைப்பண்புகளை அவர் விளக்கினார். இச்சந்தர்ப்பத்தில் ரூசோவின் இயற்பண்பு நெறி யோடு பெஸ்டலோசி முரண்படுகின்றார். கல்வியின் வாயிலாக குடும்பத்தை, கிராமத்தை, சமூகத்தை மறுமலர்ச்சி பெற வைக்க முடியும் என அவர் நம்பினார்.
கல்வியின் உள்ளடக்கம் பெஸ்டலோசியினால் இரு பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறப்பட்டது.
1) பருப்பொருள் தொடர்பான கல்வி உள்ளடக்கம். இதில் பொருள் உற்ப்பத்தி, விவசாயம், வணிகம், அறிவியல், பயன் தரு கலைகள் முதலியவை பற்றிய கற்கைகள் இடம்பெறும்.
2) அறவொழுக்கம் தொடர்பான கல்வி உள்ளடக்கம். இப்பிரிவில் ஒழுக்கவியல், சமயம், குடியியல் உரிமைகள், பிரசைகளுக்குரிய கடமைகள் ஆகியவை பற்றிய கற்கைகள் உள்ளடங்கும்.
இவ்வாறாக அமையும் கல்வியை வழங்கும்பொழுது கல்வியின் நடைமுறை முக்கியத்துவத்தை அல்லது பிரயோக முக்கியத்துவத்தை அவர் ஆழ்ந்து வலியுறுத்தினார். இச் சிந்தனையின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் அவரது குழந்தைக் கல்விச் சிந்தனைகளில் ஆழ்ந்து வேரூன்றி நின்றன.
அதாவது, குழந்தைகளுக்கான கல்வியும் கோட்பாட்டளவில் நின்றுவிடாது நடைமுறை சார்ந்தாக இருத்தல் வேண்டும் என்பது அவரது துணிபு.
பெஸ்டலோசியின் சிறார்கல்விச் சிந்தனைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
1) குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கியத்துவம் வழங்குதல், பேச்சுக்குப் பின்னரே எழுத்துக் கற்பித்தல் ஏற்புடையது. அவர் வாழ்ந்த காலத்தில் குழந்தைக்கல்வி, எழுதுதல் முக்கியத்துவத்தோடு ஆரம்பித்தமையை அவர் நிராகரித்தார்.
2) கற்பிக்கப்படும் பாடம் பொருள் குழந்தைகளின் உடல், உள்ள, மனவெழுச்சிக்குப் பொருந்தக் கூடியதாக அமைதல் வேண் டும்.
3) கற்பித்தல் என்பது முற்றிலும் உளவியல் மயப்பட்டதாக, எளிதில் இருந்து படிப்படியாக, சிக்கலை நோக்கிச் செல்லக் கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட்டதாக அமைக்கப்படுதலே சிறந்தது.
4) குழந்தைகளின் உள்ளுணர்வு ஆற்றலுடன் இணைந்த கல்வியை வழங்குதல் வேண்டும். அதாவது எண், மொழி, வடிவம் முதலியனவே உள்ளுணர்வு ஆற்றலுடன் தொடர்புடையவை. இவைதான் புலன்களால் தரிசிக்கப்படும் பொருள்கள் பற்றிய அறிவுக்கு அடிப்படைகளாகும். இதனை மேலும் விளக்குவதாயின் குழந்தைகள் காணும் பொருள்களுக்கு வடிவமும், எண்ணும், பெயரும் உண்டென்பதை அவர் கண்டார். பொருள்கள் பற்றிய நேரடி அனுபவங்களில் இருந்தே அறிவு கிளார்ந்தெழுவதாகக் கொள்ளப்படுகின்றது.
5) உற்றுநோக்கலும் புலக்காட்சியும் அறிதலுக்கு அடிப்படை களாகின்றன. உற்றுநோக்கப்படும் பொருள்கள் மொழியுடன் தொடர்பு படுத்தப்படல் வேண்டும். பொருளறியா ஒலிகளைக் கற்பிப்பதனால் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தெளிவற்ற-ஆனால் பொருள்பொதிந்த புலன் உணர்வுகளைத் தெளிவு படுத்துவதற்குச் சொற்கள் துணைநிற்கும். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒலி மொழி முறையியலுக்குரிய முன்னோடியாகவும் அவரைக் கருதலாம்.
6) குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஓவியம் வரைதலின் முக்கி யத்துவமும் அவரால் வலியுறுத்தப்பட்டது. பொருள்களின் வடிவங்கள் பற்றிய விளக்கத்தைப் பெறுவதற்கு ஓவியம் துணைசெய்யும். எழுத்துக்கள் செப்பமடைய ஓவியங்கள் துணை செய்யும் என்றும் அவர் கருதினார்.
7) செயல்முறை அனுபவங்களில் இருந்தே எண்ணும் கணிதமும் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற கருத்தையும் முன் மொழிந்தார். அவர் காலத்தில் குழந்தைகள் மீது திணிக்கப் பட்ட அருவநிலையான (யுடிளவசயஉவ) கற்பித்தல் பயனற்ற நடவடிக்கை என்பது அவரது துணிபாக இருந்தது.
8) கற்றலின் பல்வேறு கூறுகளிடையேயும் தொடர்பும் ஒத்திசைவும் இருக்கவேண்டிய தேவையைத் தமது கற்பித்தல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவுறக் கூறினார். அதன் வாயிலாக ஆளுமையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வளமூட்ட முடியும்.
9) அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதற்குரிய தகுதி யுடையவர்கள் என்ற கருத்து அவரால் உரத்து ஒலிக்கப் பட்டது. ஒரு வகையில் தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் சமத்துவம், சமவாய்ப்பு முதலிய முனைப்புகளுக்கு உரிய முன்னோடி களுள் பெஸ்டலோசியையும் ஒருவராகக் கருத முடியும். ஆற்றலுள்ளவர்களுக்கும் வசதிபடைத்தவர் களுக்குமே கல்வி என்ற கருத்து வலிமையாக ஒலித்த காலகட்டத்தில் பெஸ்டலோசி நலிந்தவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கான குரலாக ஒலித்தார்.
10) மனிதரின் தேவைகளில் இருந்தே கல்வியும் கண்டுபிடிப்புக்களும் முகிழ்த்தெழும் என்பது அவரது கருத்தாக அமைந்து. 'அழுதபிள்ளை பால் குடிக்கும்' என்று தமிழ் மரபிலே கூறப் பட்ட கருத்துக்களுக்கும் பெஸ்டலோயின் கருத்துக்களுக்குமிடையே ஒப்புமை காணமுடியும்.
பெஸ்டலோசி அவர்களது கல்விப் பங்களிப்புக்களைத் திறனாய்வு செய்கையில் குழந்தைகள் கல்வியிலும் வறியோர்கள் கல்விலும் அடிப்படையான புரட்சிகளைச் செய்தார் என்று கூற முடியாது. ஆனாலும் குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் செயல்முறை சார்ந்த கற்பித்தல் இயக்கத்தை வலுவூட்டிய ஒருவராக அவர் விளங்கினார் என்பதை மறுக்க முடியாது. பெஸ்டலோசியின் பணிகள் அவரின் பின்வந்தோரால் தொடர் ந்து முன்னெடுக்கப்பட்டு வருதல் அவரின் செல்வாக்கைத் தெளிவுபடுத்துகின்றன.



ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட்
(1776 - 1841)

பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவராகிய கேர்பார்ட், தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.
இவரால் எழுதப்பெற்ற பின்வரும் நூல்கள் இவரின் கல்விச் சிந்தனை களையும் தெளிவாக விளக்குகின்றன:

(1) “கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்”
(2) “கற்பித்தலியல் விஞ்ஞானம்”
(3) “கல்வி விஞ்ஞானம்”
(4) “கல்விக்கான கலைச் சொற்றொகுதி”
(5) “கற்பித்தலியற் சுருக்கம்”
(6) “புலக்காட்சி அடிப்படைகள்”

புலக்காட்சிகளை முன்னறிவோடு தொடர்பு படுத்திக் கற்கும் “தொடுபுலக்காட்சி” (யுppநசஉநிவழைn) யின் முக்கியத்துவம் இவரால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அறிவைத் திரட்டிக்கொள்வதில் அவரிடம் ஏற்கனவேயுள்ள அறிவின் களஞ்சியம் முக்கியத்துவம் பெறுதல் இந்த எண்ணக்கருவாற் புலப்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இக்கருத்தானது “அனுபவத் திரளமைப்பு” என்ற எண்ணக்கருவால் பியாசேயின் விருத்திமுறை சார்ந்த உளவியலில் நன்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் உளவியல் ஆகிய துறைகளை விஞ்ஞானப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை இவர் முன்னெடுத்தார். இவர் வாழ்ந்த சூழல் விஞ்ஞான வளர்ச்சியோடு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான மயப்படுத்தலோடு இணைந்த கற்பித்தலின் முக்கியத்துவம் அவரால் உணரப்பட்டிருந்தது. கற்பித்தலைக் கல்வியின் நடுநாயகக் கருத்தாக அவர் கொண்டார். கற்பித்தலின் விளைவாகவே சிந்தனையும் ஒழுக்கமும் முகிழ்த்தெழும் என்று அவர் கருதினார்.
கற்பித்தலியலை விஞ்ஞான மயப்படுத்த முயன்ற கேர்பர்ட், கற்பித்தல் தெளிவு கொண்டதாயும், செயலமைப்புவழி ஒருங்கிணைப்புடைய தாகவும், பொருத்தமான முறையியலை உள்ளடக்கியதாகவும் அமைக்கப்படல் வேண்டுமென்று விளக்கினார். இவை பின்வரும் ஆங்கில எண்ணக் கருக்களால் விளக்கப்படும்:
(ய) ஊடநயசநௌள
(டீ) யுளளழஉயைவழைn
(ஊ) ளுலளவநஅ
(னு) ஆநவாழன
கேர்பேர்ட்டின் மாணவராகிய சில்லர் என்பவர் இப்படிநிலைகளை மேலும் விரிவுபடுத்தி பின்வருமாறு நிரற்படுத்தினார்.
அ) தயாரித்தல்
ஆ) சமர்ப்பித்தல் அல்லது வழங்குதல்
இ) தொடர்புறுத்தல்
ஈ) செயலமைப்பு வழி ஒருங்கிணைத்தல்
உ) பிரயோகித்தல்
இந்தப் படிநிலைகள் ஆங்கிலத்தில் பின்வருமாறு விளக்கப்படும்:
ய) PசுநுPயுசுயுவுஐழுN
டீ) Pசநளநவெயவழைn
ஊ) யுளளழஉயைவழைn
னு) ளுலளவநஅ
நு) யுppடiஉயவழைn
சிறாருக்குரிய கற்பித்தல் தொடர்பாக கேர்பேர்ட் முன்வைத்த கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:

1) சிறார்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும் பொழுது அவர்களது தொடுபுலக் காட்சியையும், அதனுடன் தொடர்புடைய முன் னறிவுத் திரளையும் அறிந்து கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
2) புலக்காட்சிப் பயிற்சிகள் கற்பித்தலிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. வடிவங்களைத் தெளிவாக உற்றுகோக்கி உள் வாங்கிக் கொள்ளச் செய்வதன் வாயிலாக கணித அறிவை மேம் படுத்த முடியும்.
3) கட்டுப்பாடு, பயிற்சி ஆகியவை கற்பித்தலிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. பயிற்சி எப்பொழுதும் தற்கட்டுப் பாட்டையும், தன்னடக்கத்தையும், சுய உறுதியையும் வளர்க் கின்றது. கட்டுப்பாடு, பயிற்சி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க் கும்பொழுது, பயிற்சியையே மேலானதாகக் கொள்ளுதல் வேண்டும். பயிற்சியும் கற்பித்தலும் ஒன்றையொன்று தழுவி நிற்றல் வேண்டும்.
4) ஒழுக்க மேம்பாட்டைக் கற்பித்தல் வாயிலாகவே முன்னெடுக்க முடியும். ஒழுக்கம் என்பது அகத்திலிருந்து முகிழ்த்தெழுவதால் அகத்தைச் செழுமைப்படுத்த மிக விரிந்த அகல்விரி கற்பித்தல் துணைசெய்யும்.
5) கற்பித்தல் கவர்ச்சியும் நாட்டமும் (ஐவெநசநளவ) கொண்டதாக அமைக்கப்படுதல் வேண்டும். கவர்ச்சியானது ஆர்வத் தைத் தூண்டி வினைத்திறனுடன் முயற்சியடையச் செய்கின்றது. கவர்ச்சியை மலினப்பட்ட பொருளில் அவர் பயன்படுத்த வில்லை. கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடப் பொருளை மலினமாக்கிவிடக் கூடாது.
6) பன்முனைப்பட்ட கவர்ச்சிகளைச் சிறார்களிடத்து வளர்த் தல் வேணடும். அதாவது ஒருவர் பல்வேறு பாடங்களை யும் கற்பதற்கு உற்சாகமளித்தல் வேண்டும். இதனால் ஒருவரது சிறப்புத் தேர்ச்சி நிராகரிக்கப்படுவதாகக் கொள்ளமுடியாது.
7) கற்பிக்கப்படும் பாடங்களை செய்தி வழங்கும் பிரிவில் அடங்கலாம் அல்லது உணர்ச்சியூட்டும் பிரிவில் அடங்க லாம். அதாவது அறிகை, எழுச்சி என்ற பிரிவுகளை அவர் சுட்டிக் காட்டுகின்றார். அறிகை சார்ந்த பாடப் பொருள் களை உணர்ச்சியூட்டும் வகையிலே கற்பித்தல் ஆசிரியருக் குரிய பணியாகும்.
8) பகுத்தறிதல், தொகுத்தறிதல் என்ற திறன்களை வளர்க்கும் வகையிலே கற்பித்தலைக் கட்டமைப்புச் செய்து அவற்றுக் குரிய பொருத்தமான பாடப் பொருள்களை அமைத்தல் வேண்டும் என்பது அவரால் குறிப்பிடப்படுகின்றது.
பெஸ்டலோசியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிறுவர்க்கான கல்வியை வளம்படுத்தும் பல்வேறு நுண்ணுபாயங்களை இவர் முன் மொழிந்துள்ளார். கைத்தொழில் மயப்பட்டு மாற்றமடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய சூழலில், பொது மக்களுக்கான கல்வி விரிவடைந்துசென்ற நிலையில், அனைத்துச் சிறார்களையும் ஒரே வகுப்பறையிலே வைத்துக் கற்பிக்கும் கவிநிலையில் எதிர் நோக்கப்பட்ட பிரச்சினைகளுக்குரிய விடையாக அவரது கல்விச் சிந்தனைகள் அமைந்தன.


பிரெட்ரிக் புரோபல்

ஜேர்மனியின் கிராமியப் பின்புலத்து வாழ்க்கை நிலைக்கள னாகக் கொண்ட ஒரு கல்வி முறைமையின் வெளிப்பாடுகளை புரோபலின் (1783-1852) ஆக்கங்களிலே காணமுடியும். சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்த சிறப்பும் இவருக்குரியது. பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்தில் பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின.
குழந்தைப் பருவத்திலே தமது தாயாரை இழந்த தவிப்பும் கிராமப் புறத்து இயற்கைச் சூழலிலே வாழ்ந்தும் கற்றும் பெற்ற அனுபவங்களும், ஆசிரியத் தொழிலிலே கிடைக்கப்பெற்ற பன்முக மான அனுபவங்களும் குழவிப் பூங்கா முறைமையை உருவாக்குவதற் குரிய தளங்களாயின. அக் காலத்து ஜேர்மனிய சிந்தனையாளர் களிடத்து முகிழ்த்திருந்த முழு நிறைவுக் கருத்தியல் (யுடிளழடரவந ஐனநயடளைஅ) இவரிடத்துச் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இறைவன், இயற்கை, மனிதன் ஆகிய மூன்றும் இணைந்த முழுமையானதும், ஒருமையானதுமான கருத்தியல் இவரால் வலியுறுத்தப்பட்டது.
புரோபலின் கல்விக் கொள்கைகளை அவர் எழுதிய பின்வரும் நூல்களில் தெளிவாகக் கண்டு கொள்ளமுடியும்.
1. “குழவிப் பூங்கா கற்பித்தலியல்”
2. “மனிதனின் கல்வி”
3. “அன்னையின் விளையாட்டும்,
மழலையர் பாடல்களும்”
4. “விருத்திவழிக் கல்வி”.
ஒவ்வொருவரிடத்தும் கல்வி முழுவளர்ச்சியை ஏற்படுத்தல் வேண்டும். ஒவ்வொருவரதும் பன்முக ஆற்றல்களைக் கல்வி முனைப் புடன் வளர்த்தல் வேண்டும். இவற்றின் வாயிலாக மனிதரிடத்து உள்ளுறைந்து காணப்படும் இறையுணர்வை வெளிக்கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை இவர் நன்கு உணர்ந்துகொண்டதுடன் தெளிவாக வெளிப்படுத்தியுமுள்ளார். மூன்று வயது தொடக்கம் ஏழுவயது வரையான குழந்தைகளுக்குரிய “குழவிப் பூங்கா” பள்ளியை அவர் திட்டமிட்டு அமைத்தார். அந்தப் பள்ளிக்கூடம் பின்வரும் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந் தது.
1) குழந்தைகள் தாம் விரும்பி ஈடுபடக்கூடிய செயல்களுக்கு பள்ளிக்கூடத்தில் வசதிகள் இருத்தல் வேண்டும்.
2) அத்தகைய செயல்களினால் தனது இயல்பை ஒரு குழந்தை அறிந்து கொள்ளவும், சூழலை விளங்கிக் கொள்ளவும் முடி யும்.
3) விரும்பி ஈடுபடும் நடவடிக்கைகள் அறிவுக்கும் செயலுக்கு மிடையேயுள்ள இடைவெளியைச் சுருக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
4) கற்றல் மகிழ்ச்சி கொண்டதாகவும், விடுதலை உணர்ச்சி தருவ தாகவும் ஆக்கம் தரும் ஊக்கலை முன்னெடுப்பதாக வும் இருத் தல் வேண்டும்.
5) ஒவ்வொரு குழந்தையிடத்தும் காணப்படும் இயல்பான படைப்பாற்றலை வளர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங் கமைக் கப்படுதலே சிறந்தது.
6) சிறுவர்க்குரிய சிற்றரசு (ஆinயைவரசந ளுவயவந) ஒன்றை அமைத் தல், சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியோடும் அவர்கள் ஈடு படல் முதலியவை அவரது குழவிப் பூங்காவிலே இடம் பெற்றன.
7) அவருடைய குழவிப் பூங்காவில் பாட நூல்கள் பயன் படுத்தப்படவில்லை. அதாவது பாட நூல்கள் பொறிமுறை யான கற்றலுக்கே இடமளிக்கும் என்று அவர் கருதினார் .
8) பாடுதல், ஓடியாடி இயங்குதல், புதிதாக நிர்மாணம் செய்தல் (ஊழளெவசரஉவழைn) முதலியவற்றால் மொழியைப் பயன்படுத்துதலும், கருத்துக்களை வெளிப்படுத்துதலும் வளர்ச்சியடைகின்றன.
9) குழவிப் பூங்காவில் பாடல்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. குழந்தையின் உடல்வளர்ச்சி. உளவளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி முதலியவற்றுக்குப் பொருத்தமான ஐம்பது பாடல்களை அவர் தயாரித்து வைத்திருந்தார். அவர் இயற்றிய பாலர் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. பல பாடல்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
10) குழந்தைகள் கல்விக்குரிய நன்கொடைகளையும் தொழிற் செயற்பாடுகளையும் அவர் வழங்கினார். வண்ணப் பந்து கள், மர உருளைகள், கோளங்கள் முதலிய பல பொருள்கள் அவர் வழங்கிய நன்கொடைகளாகும். காகித அலங்காரம், களிமண் வேலை, றேந்தை பின்னுதல், ஓவியம் வரைதல் முதலியவை அவர் வழங்கிய தொழிற் செயற்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.
11) நன்கொடைகளும், தொழிற் செயற்பாடுகளும் குழந்தை களின் புலன்களுக்கு இங்கிதமான அனுபவங்களைத் தருகின்றன. பொருள்களின் வண்ணம், வடிவம், பருமன் முதலாம் அனுபவங்களையும், எண்ணறிவையும் அழகு ணர்ச்சியையும் வளர்க்கின்றன.
12) குழவிப் பூங்காவில் விளையாட்டுக்கள் சிறப்பார்ந்த இடத் தைப் பெறுகின்றன. மகிழ்ச்சி, இசைவாக்கம், விடுதலை உணர்வு, உளநிறைவு முதலியவற்றை விளையாட்டுக்கள் வழங்கு கின்றன. குழந்தையின் தனித்துவமான இயல்புகள் விளையாட்டுக்கள் வாயிலாக வெளிவருகின்றன. அதனால் குழந்தைகளின் ஆன்மபலம் வளர்ச்சியடைகின்றது.
13) மொழிகள், கலைகள், சமயக்கல்வி, இயற்கை அறிவு, உடல் உழைப்பு முதலாம் பாடங்கள் குழந்தைகளின் உள நிலைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்படும்.
14) குழவிப் பூங்காவில் ஆசிரியர் பயிர் வளர்க்கும் தோட்டக் காராய் இருந்து குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் வேண்டும். குழந்தைகளின் இயல்பான ஆற்றல்களை அவர் மழுங்கடித்து விடலாகாது.
15) குழந்தைகளுக்குத் தரப்படும் பாதுகாப்பு வழியாக அவர் களிடத்திலே கட்டுப்பாடுகள் வளர்த்தெடுக்கப்படும். கூட்டுறவுச் செயற்பாடுகள் அதற்கு மேலும் வலிமையைத் தரவல்லது.
குழந்தைகள் கல்வியிலும், குழந்தைகளுக்கான பிரயோக உளவியற் புலத்திலும் பிரெட்ரிக் புரோபல் தனித்துவமான பங்களிப் பினைச் செய்துள்ளார். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிக் குழந்தை களுக்குக் கற்பிக்கும் எதிர்மறைப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்த வர்களுள் இவர் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர். குழந்தைக் கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி தரும் பூங்காவாகவும், உற்சாகம் தரும் நந்தவன மாகவும் இருத்தல் அவரது இலட்சியமாக அமைந்தது.


மரிய மொன்ரிசோரி அம்மையார்

குழந்தைகளுக்கான உளவியல் மயப்பட்ட கல்வி இயக்கத்தின் நவீன சிற்பிகளுள் ஒருவராக மொன்ரிசோரி அம்மையார் (1870-1952) விளங்குகின்றார். இத்தாலியில் பிறந்த இந்த அம்மையார் ரோமாபுரிப் பல்கலைக்கழகத்திலே மருத்துவத்துறையிற் பெற்ற பட்டமும், உளநலம் குறைந்த குழந்தைகளின் பராமரிப்பிலும், கல்வியிலும் ஈடுபட்டமையாற் கிடைக்கப்பெற்ற பட்டறிவும், அவரது கல்விச்;சிந்தனைகளுக்கு வளமும் வலுவும் தந்தன.
குழந்தைகளை நடுநாயகப்படுத்திய கல்விமுறையில், புலன்களுக் கான பயிற்சியின் முக்கியத்துவத்தை அம்மையார் வலியுறுத்தினார். அதா வது பொருத்தமான முறையில் குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி தந்தால் அவர்கள் அறிவில் மேம்பாடு அடைந்து கொண்டு செல்வார்கள் என்பதை அவர் கண்டறிந்தார். அவர் நடத்திய பரிசோதனைகள் இந்த முடிவுக்கு மேலும் வலுவூட்டின.
குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை பொருந்தியவர்கள். இந்நிலையில் எல்லாக் குழந்தைகளையும் ஒரே வகுப்பில் இருத்தி ஒன்றாகக் கற்பிக்கும் பொழுது அவர்களின் தனித்தன்மைகள் நசுக்கப் பட்டு விடலாம் என்ற அச்சம் அம்மையாருக்கு எழுந்தது. ஒவ்வொரு குழந்தையும் தத்தமது இயல்புக்கு ஏற்பவும், தன் வேகத்துக்கேற்பவும் கற்பதற்கு வழியமைத்துக் கொடுத்தல் வேண்டும்.
குழந்தைகளின் தனித்துவம், குழந்தைகளுக்குரிய புலன் பயிற்சி, மற்றும் கற்பித்தல் சாதனங்கள் முதலியற்றை முதன்மைப்படுத்திய அம்மையாரின் குழந்தைக் கல்விக் கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1) குழந்தைகளது தனித்துவத்தையும் தனியாள் இயல்புகளை யும் மலர்ச்சியடையச் செய்யும் வண்ணம் கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
2) அறிவின் நுழைவாயில்களாக அமையும் புலன்களுக்குப் பல வகையாகவும் பல நிலைகளிலும் பயிற்சி தருதலே சிறந்த கற்பித்தல் முறையாகும். மூன்று வயது முதல் ஏழு வயதுவரையான வீச்சில் உள்ள மாணவர்ள் தீவிரமான புலன் செயற்பாடுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3) புலன்களுக்குப் பயிற்சிதரும் விளையாட்டுக்களுக்கும், செயற்பாடுகளும் கற்பித்தலிலே சிநப்பிடம் பெற வேண்டி யுள்ளன.
4) தாமே முயன்று கற்கும் செயற்பாட்டைக் குழந்தைகளிட த்து வளர்த்தல் வேண்டும். அதற்குரிய பொருத்தமான கற்பித்தற் கருவிகளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கமைத்தலே சிறந்தது.
5) குழந்தைக் கல்வியில் குழந்தைகளின் தன்னுரிமைக்கும், சுயாதீனமான செயற்பாடுகளுக்கும் இடமளித்தல் வேண்டும்.
6) பொருத்தமான நிலையில் வழங்கப்படும் கற்பித்தற் கருவிகள் வாயிலாக சுயாதீனமான கற்றலும். குழந்தைகள் தம்மைத் தாமே திருத்தியமைத்துக் கொள்ளலும் இடம் பெறுகின்றன.
7) சிறுவர்க்குரிய பள்ளிக்கூடம் வீட்டுச் சூழலைப் பிரதி பலிப்பதாய் அமைக்கப்படுமதே சிறந்தது. குழந்தைகள் படிக்க, உணவு உண்ண, விளையாட, ஓய்வெடுக்க, உடல் உழைப்புடன் இணைந்து விளையாட, தனித்தனி அறைகள் இருத்தல் விருப்பத்தக்கது. திட்டவட்டமான நேர சூசிகை இன்றி ஒவ்வொரு குழந்தையும் தத்தமது விருப்பத்துக் கேற்ற செயல்களில் ஈடுபடுவர்.
8) சிறார்களுக்குரிய கல்வி எப்பொழுதும் நடைமுறை வாழ்க் கையைத் தழுவிச் செல்லுதல் வேண்டும். தங்களுக்குரிய பொருள்களைத் துடைத்து அழகாக வைத்திருத்தல், பல்துலக்குதல், நகங்களைச் சுத்தப்படுத்தல், கைகழுவுதல் போன்ற நாளாந்த செயற்பாடுகள் அவர்களுக்குக் கற்பிக் கப்படுதல் வேண்டும்.
9) உடல் ஒத்திசைவையும், இயக்கத்தையும் மேம்படுத்தும் உடற் பயிற்சிகளும் குழந்தைகளுக்கு வேண்டப்படு கின்றன.
10) பல்வேறு வடிவங்களைக் கொண்ட மரக்கட்டைகள், வண்ணத் தாள்கள், நாணயங்கள், மணிகள், கம்பளி நூல் கள், பெட்டிகள், வெப்ப வேறுபாடுகள் கொண்ட நீர்ப் போத்தல் முதலியவற்றைக் கொண்டு சிறந்த புலப்பயிற் சியை மாணவர்களுக்கு வழங்கலாம்.
11) அவற்றைத் தொடர்ந்து வண்ணங்களை இனங்காணல், வடிவங்களை இனங்காணல், ஒலிகளை இனங்காணல், எடை வேறுபாடுகளை அறிதல் முதலாம் செயற்பாடுகளை வழங்கலாம்.
12) அவற்றைத் தொடர்ந்து எழுதுதல், படித்தல், கணித்தல் முதலியவற்றைச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கற்பித் தல் வேண்டும்.
13) எழுத்துக் கற்பித்தலில் மூன்று நடைமுறைகள் பின்பற்றப்ப பட வேண்டியுள்ளன. அவையாவன:
அ) எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பை அறிதல்.
ஆ) எழுத்துக்கள் குறிக்கும் ஒலியை அறிந்து கொள்ளல்.
இ) எழுதுகோலைக் கையாளும் திறனறிதல்.
14) சொற்களையும், சொற்றொடர்களையும் கற்பிப்பதற்கு எழுத்துப் பளிச்சீட்டு அட்டைகளைப் பயன்படுத்துதல்.
கற்பித்தலில் குழந்தை உளவியலின் பிரயோகத்தை முன்னெ டுத்த கல்வியியலாளர்களுள் அம்மையார் தனித்துவம் பெறுகின்றார். அவர் கண்ட ஆசிரியத்துவமும் உளவியல் மயப்பட்டதாக அமைந்து. ஆசிரியர் “ நெறியாளராக” இருக்க வேண்டும் என அம்மையார் வலியுறுத்தினார். குழந்தைகளின் தொழிற்பாடுகளில் தேவையற்ற வகையில் ஆசிரியர் குறுக்கீடு செய்யலாகாது. சிறந்த முறையில் குழந்தைகளை உற்றுநோக்கி அவர்கள் தனித்துவத்தைக் கண்டறிந்து ஊக்குவித்தல் வேண்டும். ஆசிரியர்களுக்குப் பாட அறிவு, மருத்துவ அறிவு, ஒழுக்கம் முதலியவை கட்டாயமாக வேண்டப்படுகின்றன.
மறைபொருளாய் அகத்தே மலர்ந்துள்ள குழந்தையின் உள்ளத்தை வளம்படுத்தும் ஆற்றல்மிக்க கருத்துக்களை அம்மையார் முன்மொழிந்தார். அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் விரைந்து பரவலாயிற்று.
இலங்கையிலும் இக்கருத்துக்கள் படிப்படியாகப் பரவலாயின. யாழ்ப்பாணத்தில் வேம்பஸ்தானில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும், பின்னர் றிம்மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும் அம்மையாரின் குழந்தைக் கல்விக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அக்கருத்துக்களை இங்கு பரப்புவதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக விருந்த கலாநிதி வண.டி.ரி. நைல்ஸ் சிறப்பார்ந்த பங்கு வகித்தார்.


ஜி.ஸ்ரான்லி ஹோல்

சார்ல்ஸ் டார்வினுடைய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் குழந்தைக் கல்வி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டோ ருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தன. ஐரோப்பாவில் வாழ்ந்த ஆய்வாளர்கள் குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சி பற்றிய ஆய்வுகளிலே சிறப்பார்ந்த கவனம் செலுத்தினர். அமெரிக்காவில் இந்த ஆய்வுகளின் செல்வாக்கு ஜி. ஸ்ரான்லி ஹோல் (1844-1924) அவர்களிடம் பிரதிபலித்தது. குழந்தைகள் பற்றிய கற்கையின் தந்தை என்று அவரை அமெரிக்கர்கள் குறிப்பிட லாயினர்.
மனிதரைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு குழந்தை நிலையி லிருந்து அவர்களது விருத்திபற்றிய கற்கை இன்றியமையாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவரதும் விருத்தியானது எமது முன்னோர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்தவற்றுக்கு ஏறத்தாழச் சமமானதாயிருக்கும் என்ற ஒரு கருத்தை அவர் முன்வைத் தார். இது தொடர்பாக அவர் குழந்தைகள் தொடர்பான ஆசிரியர் களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவற்றிலிருந்து சிறார்களின் நடத்தைகள், மனப்பதிவுகள், உணர்வுகள், பிரச்சினைகள், நம்பிக்கை கள் தொடர்பான பெருந்தொகையான தகவல்களைத் திரட்டிக் கொண்டார்.
ஆரம்பத்தில் இவர் அகநோக்கல் என்ற ஆய்வுமுறையைப் பயன் படுத்தினார். அந்த ஆய்வுமுறையில் இருந்த மட்டுப்பாடுகளை அவர் பின்னர் அறிந்துகொண்டார், அதன் பயனாக அவர் திருத்தமானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான வினாக்கொத்துக்களைப் பயன்படுத்தி சிறார் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தார். இந்த முறையின் பயனாக மிகக் குறைந்தளவு காலப்பகுதியில் பெருந்தொகுதியான தகவல்களையும், தரவுகளை அவரால் திரட்ட முடிந்தது.
வளர்ந்தோர்கள் சிறுவர்களாயிருந்த பொழுது பெற்ற அனுபவங் களையும் வினாக் கொத்துக்கள் வாயிலாக அவர் திரட்டிக் கொண் டார். அவை அனைத்தையும் தொகுத்து சிறாரின் ஆசைகள், பயம், தண்டனைகள், கனவுகள், விளையாட்டுப் பொருள் விருப்புக்கள், தம்மைப்பற்றிய புலக்காட்சி , பிரார்த்தனைகள், ஒத்திசைவுகள் பற்றிய புலக்காட்சி முதலியவற்றை அறிக்கைகளாக அவர் வெளியிட்டார்.
இயன்றவரை விஞ்ஞான பூர்வமாகவும், புறவயமாகவும், சிறார் தொடர்பான ஆய்வுத்தகவல்களைப் பெறவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. விஞ்ஞான பூர்வமற்றதும், குறை பாடுகள் கொண்டதுமான ஆய்வுக் கருவிகளை சிறார் உளவியலி லும், சிறார் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தலாகாது என்ற அணுகுமுறையை முன்னெடுத்தவர்கள் வரிசையில் இவர் முதன்மை யாகக் கருதப்படுகின்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் சிறார் தொடர்பான ஆய்வுகளை விஞ் ஞான பூர்வமாக முன்னெடுப்பதில் இவர் மேற்கொண்ட பணிகள் பிற சிந்தனையாளர்கள் மீதும் செல்வாக்கினை ஏற்படுத்தின.
வினாக் கொத்துக்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை யும், தரவுகளையும் பகுத்து ஆராய்வதற்கு இவர் எளிமையான புள்ளி விபர வியல் நுட்பங்களைப் பயன்படுத்தினார். இதுவும் இவரது அணுகு முறையின் தனித்துவமாகக் கருதப்படுகின்றது.
ஸ்ரான்லி ஹோல் மேற்கொண்ட சிறார் தொடர்பான ஆய்வுகள் டார்வினுடைய கூர்ப்புக் கோட்பாட்டினைச் சிறாருடன் தொடர்பு படுத்தி மீளாய்வு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்தன. விலங்கு களில் இருந்து மனிதனின் எவ்வாறு படிமலர்ச்சி கொண்டான் என்பதை விளக்கும் ஒரு தொடுகோடாக (டுiமெ) குழந்தைகள் அமை கின்றார்கள் என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. குழந்தைகளின் அசைவுகளுக்கும் மீன்களின் நீச்சலுக்குமிடையே தொடர்புகள் காணப்படுகின்றன. குழந்தைகள் தாவுதலுக்கும் முலை யூட்டிகளின் அசைவுகளுக்குமிடையே ஒற்றுமைகள் தென்படுகின் றன. குழந்தைகள் ஓடுதலுக்கும் மனிதரின் அசைவுகளுக்குமிடையே உடலியக்கம் சார்ந்த தொடர்புகள் உள்ளன.
டார்வினுடைய ஆய்வு முன்னெடுப்புக்கள் அவருக்குப் பின்னர் பல பரிமாணங்களிலே வளர்ச்சியுற்றுச் சென்றன. டார்வினுடைய ஆய்வுகளையும் முன்மொழிவுகளையும் முன் உதாரணங்களாகக் கொண்டு குழந்தை உளவியல், குழந்தைகளின் விருத்தி, உடலியக்கச் செயற்பாடுகள், மனவெழுச்சிக் கோலங்கள், சூழலுக்கு அவர்கள் இசைவாக்கம் செய்யும் முறைமை, முதலாம் துறைகளில் புறவயமான ஆய்வுகளை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவராக இவர் விளங்குகின்றார்.
சிறார்களுக்கான நுண்மதித் தேர்வுகளை வடிவமைப்பதிலும் இவரது ஆக்கப்பணிகள் விதந்து குறிப்பிடப்படுகின்றன. ஹேலின் மாணவர்கள் இப்பணியினை முன்னெடுத்துச் சென்றார்கள். லிவிஸ் மடிசன், ரேர்மன் என்ற இவரது மாணவர் நுண்மதித் தேர்வினை ஆக்கும் பணியிலே சிறப்பார்ந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.

கருத்துரையிடுக