பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் இந்நாட்டுப் பிள்ளைகள் எந்தவிதமான தங்குதடையின்றி சீரான சீர்கல்வியை இடையறாது தொடரவும் அதற்கான ஊக்கவிப்பாக அவர்களுக்கான நூல்களும், சீருடை மற்றும் உணவு போன்றனவும் வழங்கப்பட்டு வருகின்றமை நாமறிந்த விடயம்தான்.
அதுமட்டுமா என்ன? மாணவர்களுக்கு எவ்வாறு கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்கிற பல்வேறு நுணுக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், உளவியற் கருத்துக்கள் போன்றவற்றையும் ஆசிரியருக்கு பயிற்றுவித்து அதன் ஊடாக சிறந்த கல்வியையும், சீர்மிகு ஒழுக்க விழுமியங்களுடன் கூடியதான நாட்டிற்குகந்த பண்பாளனாகவும் மாற்றி நாளைய உலகின் தலைசிறந்த தலைவர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், இன்னும் பல நோக்குகளையும் அடைந்து கொள்வதற்காக பாடசாலைக் கல்வி நடைமுறை தரம் ஒன்றிலிருந்து ஆரம்பித்து உயர்தரம் வரையிலும் வியாபித்து செல்கின்றது.
ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் வயதின் அடிப்படையிலும், உளரீதியான மனோ எழுச்சிகளின் அடிப்படையிலும் காலத்திற்கு காலம் அறிஞர்கள் பலரின் ஒத்துழைப்புடனும் காலத்திற்கேற்றவாறும் பாடங்களும், பாடத்திட்டங்களும், பிள்ளைகளின் நடத்தைவாத ஆய்வுகளின் பேறாகவும், நவீன உலகின் போக்குக்கு ஏற்பவும் கல்வித்துறை பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகிறது.
கோடான கோடி ரூபாய்களை செலவு செய்து மாணவர்களின் புரிந்துணர்வினைக் கைக்கொண்டு வெற்றி நடைபோடும் பாடசாலைக் கலைத்திட்டத்தின் உயிர் நாடியாக மாணவர்கள் திகழ்கிறார்கள். மாணவர்கள் இல்லை என்றால் எதற்குப் பாடசாலைகள்? என்கிற வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தரம் ஒன்றில் சேருகின்ற பிள்ளைகளை சரியான முறையில் கற்பிக்கின்ற ஆசிரியர் அறிந்து கொண்டால் கற்றலுக்கான வழித்துணை அனைத்துமே சரியாக அமைந்துவிடும்.
‘முதற்கோணம் முற்றும் கோணம்’ என்பார் மூத்தோர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ன! இதுவும் நாம் தரப்போகிற விடத்திற்கு ஒத்துழைக்கும் என நம்புகிறேன். சரி விடயத்திற்கு வருவோம். இன்று பாடசாலைகளில் தரம் ஒன்றில் பிள்ளையை சேர்ப்பதற்கு போட்டியோ போட்டி, ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் சிலவேளை தாம் எதிர்பார்த்த பாடசாலையில் தனது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் பெற்றோருக்கு சில பாடசாலைகளில் பிள்ளைகளே சேரவில்லை என்கிற நச்சரிப்புக்கள் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு, வகுப்பில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிற பிரச்சினை பெரிய பாடசாலைகளில். இவ்வாறு தரம் 1 இல் மாணவர்களை சேர்க்கின்ற நிலையில், அல்லல்படுகின்ற நிலையில் கல்வியமைச்சும் புதிய புதிய சுற்று நிருபங்கள் தரம் 1 இல் பிள்ளைகளை சேர்ப்பதில் இழுபறி இவற்றையும் தாண்டி பிள்ளை ஏதோர் பாடசாலையில் சேர்ந்த நிம்மதியில் பெற்றோர் இருந்து விடுகின்றனர்.
இனிமேல்தான் ஆரம்பிக்கிறது மாணவர்களின் தொழிற்பாடுகள். உண்மையில் பிள்ளை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருமுன்னராக பெற்றோரையும் தன் சுற்றுத்தாரையும், குறிப்பிட்ட உறவினரையும் பார்த்துப் பழகிய பிள்ளைக்கு பாடசாலைச் சூழல் பாரியதோர் பிரச்சினையை தோற்றுவிக்கலாம். அப்போதுதான் தரம் ஒன்று கற்பிக்கின்ற ஆசிரியர் சரியான முறையில் மாணவர்களை இனங்கண்டு அவர்களை அறிந்து கொள்வதன் ஊடாக பாடசாலைக்கும், வீட்டுக்கும் இடையிலான தொடர்பை சிறந்த முறையில் பேணி மாணவர்களினது, கற்றலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவும் இச்செயற்பாட்டை கட்டாயம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் செய்தேயாக வேண்டிய நிலைக்கு உட்படுகின்றனர்.
ஆதலால்தான் இதனை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கல்வி மறுசீரமைப்பினைத் தொடர்ந்து, பின்ணூட்டல் வேலைத்திட்டங்களினூடாகவும் கண்டறியப்பட்ட பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொண்டு தேசிய கல்வி நிறுவகம் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் தரத்தில் பாடசாலைகள் பிரவேசிக்கின்ற பிள்ளைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் “பிள்ளைகளை அறிந்து கெள்வோம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நடைமுறையானது பிள்ளைகளினது மனமகிழ்ச்சியைத் தொடராக வைத்திருந்து பாடசாலையும், வீடும் ஒரேயமைப்புடனே காணப்படுகிறது என்கிற உள்ளார்ந்த நிலையை இப்பாலக பிஞ்சுள்ளங்களில் படிப்படியாக உரமேற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களைத் தயாரித்து அதுனூடாக கற்றலை ஒரு யுக்தியாக மேற்கொள்ளும் நோக்காவே இவை கருதப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை தேசிய கல்வி நிறுவகத்தின், ஆரம்பக் கல்வி, விசேட கல்விப்பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து கல்வி வெயியீட்டுத் திணைக்களத்தின் உதவிகொண்டு இதனையொரு கையேடாக பாடசாலைகளுக்கு வழங்கியும் உள்ளன.
இதனில் காணப்படுகின்ற 16 வேலைத்திட்டங்கள் உண்மையாகவே பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மேலும் வலுவூட்டி இரசனை மிக்கதாக்கும் நோக்குடன் பின்வரும் குறிக்கோள்களையும் அடையும் நோக்குக்கு அமைய இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனலாம். அவைகளாவன:
தரம் ஒன்றில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தில் பாடசாலை தொடர்பான விருப்பை ஏற்படுத்த தரம் 1 இல் சேர்கின்ற மாணவர்களுக்கிடையிலான நட்பினை உருவாக்கிக் கெள்ள.
மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையிலான நட்பினை ஏற்படுத்தவும்.
இப்பருவ பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை ஆரம்பத்தி லிருந்தே ஆசிரியர் இனங் காணவும்.
முறைசார்ந்த கல்விப் புலமான பாடசாலைக்கு வருகின்றமை யினால் அவர்களின் உளரீதியான ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறைக்கு வித்திடவும், இதுபோன்றவற்றுடன், பிள்ளையை அறிந்து கொள்ளவும், பெற்றோருக்கு மாணவர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு வரவும், சக வகுப்பு மாணவர்களுடன் பங்கெடுத்து விளையாடவும், பாடசாலையைப் பற்றிய நடைமுறைகளை ஓரளவாவது கற்றுக் கொள்ளவும் வேண்டிய நிலையில்தான் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான ‘ஏடுதொடக்க விழா’ என்று தரம் இரண்டு வகுப்பு (பெரிய வகுப்பு) மாணவர்களால் வரவேற்கப்படுவதும் இவைகளை முன்னிட்டேயாகும்.
இவைகள் காரணமாக பாடசாலையின் மாணவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் அற்ற நிலையில் மகிழ்ச்சியான சூழலில் ஒரு ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில் சிநேகபூர்வமான முறையில் கல்வியைத் தொடரக்கூடிய வாறான நிலையிலும் தரமான கல்விச் சூழலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வகைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஊடாக வழங்கப்படுகின்ற 16 செயற்பாடுகளையும் இறுதியாக பிள்ளைகளை இனங்காணும் நியதிகளாக 28 உள்ளார்ந்த ஆற்றல்களும் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படுகின்ற போது நாமும், நாடும், பெற்றோரும் எதிர்பார்க்கின்ற ஒரு திடமான, உறுதியான சமூதாயத்தின் உறுப்பினரை உறுதிசெய்கின்ற அத்திவாரத்தை இடுகிறோம் என்ற நிலை ஆரம்பப்படிகளிலேயே இடப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
இதன் மூலமாக விளையாட்டு வீடு, சுதந்திரமான செயற்பாடுகள், குழு விளையாட்டு 1,2, ஆடல் பால், அபிநயம், கதையில் வரும் பாத்திரங்களை பாவனை செய்தலும், பல்வேறு ஒலிகளை எழுப்புதலும், பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை எழுப்புதலும் (குருவிகள் கிராமம்), விளையாட்டு முற்றம், வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல், ஆக்கச் செயற்பாடுக்ள 1,2, கதை சித்திரம் வரைதல், ஊர்வலம், எண்ணுதல், பொருள்களை எண்ணுதல் / எண் விளக்கம் 1,2 போன்ற 16 செயற்றிட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனது குறிக்கோள், வளங்கள், முன் ஆயத்தம், செயலொழுங்கு, இன்காணக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்களை போன்றனவும் ஆசிரியரால் மாணவர்களிடமிருந்து பெறத்தக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை வேறுவிதமானவாறு, சூழலுக்கேற்றவிதமாகவும் மாற்றியமைக்கின்ற சுதந்திரத் தன்மையும் ஆசிரியருக்கு உண்டு. எனவே இவ்வேலைத்திட்டத்தை பிள்ளைகளிடம் திணிக்காது, ஒரு பரீட்சையாக மேற்கொள்ளாது கருதி செயற்பட வேண்டிய பொறுப்பும் ஆசிரியரிடம் காணப்படுதல் வேண்டும். இருப்பினும் எதிர்பார்க்கும் அனைத்து பிள்ளைகளும் இவ்வாறு இயங்காமலும் விடலாம். ஆதலால்தான் குறைபாடுகளை அல்லது விசேட தேவையுள்ளவர்களை இனங்காணவும் இந்தச் சந்தர்ப்பங்கள் உதவுகின்றன. இதனையும் கருத்திற்கொண்டு குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்வதன் ஊடாக பாடசாலையை பிள்ளைகள் விரும்புகின்ற ஓர் இடமாக மாற்றி, வெற்றிகரமான கற்றல் – கற்பித்தல் செயல்முறையை உருவாக்குவதற்கு இதுபோன்ற வேலைத்திட்டங்கள் துணையாக கொள்ளப்படுகின்றன எனலாம்.
ஆதலால்தான் கால்ரோஜஸ் (விar ஞிogலீrs) என்கிற அறிஞர் இவ்வாறு கூறுகிறார். அதாவது “ஆசிரியர் சிறப்பான உறவை வளர்த்து, கூடுதலான அனுபவத்தின் மூலம் கற்றலை மேற்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதனை மாணவர்கள் விரும்பி ஏற்பார்கள். இங்கு மாணவர்களுக்கு எல்லாச் சுதந்திரங்களும் வழங்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் மிக நெருங்கிய சுமுகமான மானுடத் தொடர்பை விருத்தி செய்ய இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகள் பயனுடையதாக அமைகின்றது” என்று கூறுகின்றார்.
அந்தவகையில் பார்க்கின்றபோது தற்காலத்தில் பிள்ளைநேயப் பாடசாலைகள் என்ற பெயரில் வலயத்திற்கு வலயம் பல பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கெல்லாம் பிள்ளைகளை நேயமுடன் கவனிக்கப்படல் வேண்டும் என்பதற்காக பிள்ளைகளின் அறிவுத்தாகம் ஈடுசெய்வதற்காக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு பாடசாலைகள் அபிவிருத்தியை நோக்கி நடை பயின்று வருகின்றன. ஆனால் இவ்வாறான பாடசாலைகளிலும் சரி, பிள்ளைநேயப் பாடசாலை அல்லாத பாடசாலையானாலும் சரி பிள்ளை நேயங்கள் சரியான முறையில் பின்பற்றப் படுகின்றதா? என்பது ஒருபுறம் இருக்க பாடசாலைகளுடன் சேர்ந்து வீடுகளிலும் மகிழ்ச்சிகரமான சூழலில் கற்கின்ற பிள்ளை நேயப் பண்புகளை கொண்டதாக மாற்றம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் எதிர்பார்க்கின்ற கல்வியை மாணவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியும்.
இன்று மனித நேயமோ? பிள்ளைநேயமோ? பற்றி சிந்திக்கவும், சுதந்திரமான கல்வியை பெறவும், பிள்ளைகள் விளையாடவும் முடியாதவாறு அனைத்து தரத்தாரும் பிள்ளையை எவ்வேளையிலும் படி, படி என்று கவ்வியைத் திணிக்கின்ற ஒரு நிலையில் முன்பள்ளியே தொடங்குகிறது ‘டியூசன்’ கல்வி. இதனால்தான் இயல்பான முறையில் தரம் 5 மாணாக்கர் வெற்றியடைய வேண்டிய புலமைப் பரீட்சைக்காக பல்லாயிரம் ரூபாய்களை செலவு செய்து பிள்ளையும் கற்று சித்தியடைந்தால் கிடைப்பது ஊரில் இன்னாரின் பிள்ளையும் பாஸ் பண்ணியுள்ளாராம். அவ்வளவுதான் பிள்ளையின் பெற்றோருக்கு கிடைக்கும் மதிப்பு.
ஆனால் பிள்ளையின் உளரீதியான பாதிப்பை யார்தான் கண்டு கொண்டார்கள்? என்கிற பிரச்சினைகளிலிருந்து விடுபட ஏதுவாக இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறு வதிலிருந்து தப்பிக்க சரியான சந்தர்ப்பங்கள் வந்து இடையூறுகளாக நிற்கின்றன. இதன் காரணமாக தற்காலத்தில் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பரீட்சை மையமான கற்றல் கற்பித்தலே ஆரம்பித்திலிருந்து நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே எந்தவிதமான அபிவிருத்தியும் நிலையான அபிவிருத்தியாக அமையாது. அது எதுவரையில் என்றால் மாணவர்கள் சிறந்த பண்புள்ளவர்களாக ஆக்கப்படுகின்ற வரையில்தான், உண்மையான அபிவிருத்தி கல்வியில் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டும். ஆதலால்தான் பரீட்சைப் பேறுகளினது வளர்ச்சியுடன் நல்ல பண்பாளர்களையும் இணைத்தே உருவாக்குதல் ஆசிரியரினதும் கடமையாகக் கொள்ளப்படுகின்றது. அதற்கு ஆரம்பக்கல்வியில் இதுபோன்ற பிள்ளைகளை அறிதல் செயற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
எனவே எதிர்காலச் சிற்பிகளை உருவாக்க விளையும் பாடசாலைகள் அங்கு உலாவரும் பிள்ளைச் செல்வங்களை கல்வியோடு இயைந்ததாக காணப்படுவதற்கு ஏற்ற சூழலை பாடசாலையின் பொறுப்பாளர்களான அதிபர்களும், ஆசிரியர்களும் வழங்கும் அதேவேளையில் ஆசிரியர்கள் தமது பாடங்களை கற்பிப்பதற்கு அரசினால் வழங்கப்படுகின்ற “வழிகாட்டி அறிவுரைப்பு நூல்களை” சரியான முறையில் வாசித்தறிந்து, மாணவர் மையக் கற்றலுக்குகந்தவாறு அதனை மாற்றியமைத்து செயற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் ஆசிரியருக்கு உள்ளது என்கிற விடயத்தையும் கவனத்திற் கொண்டு பிள்ளைகளை இனங்கண்டு, இடர்பாடுகளை விளக்கி, பிள்ளையிடம் குறைபாடுகளை விடுத்து திறமைகளை வெளிப்படுத்தி, வகுப்பறையானது அனைத்துப் பிள்ளைகளும் கற்பதற்கான இடமாக மாற்றம் பெற ஆசிரியர் வழிகாட்டவும், அதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுதல் வேண்டும்.
ஆகவேதான் பிள்ளைகள் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள இக்கால கட்டத்தில் இவர்களுக்கான இதுபோன்ற பயிற்சிகள் மூலமாக பிள்ளைகளை அறிந்து கொள்ளும் வேலைத்திட்டங்கள் மாணவரின் உள எழுச்சிக்கு புத்துயிர் அளிக்கின்ற விடயத்தை பெற்றோரும் அறிந்திருப்பதன் அவசியப்பாடுகள் காரணமாகவே இதனை விரிவாக ஆராய்ந்துள்ளேன். இவைகள் வலுவிழந்து போகாதிருக்க அனைவரும் பாடசாலைக் கல்வியின்பால் கவனத்தை செலுத்தி நாளைய நற்பிரஜை களை தோற்றுவிக்க உறுதுணை யாக அமைந்திடுவோம்.