பாதுகாப்பான பிரவுசர் எது...???

ஸ்விஸ் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் அண்ட் நெட்வொர்க்ஸ் லேபரட்டரி நிறுவனம் ஐ.பி.எம். மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 18 மாதங்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இறுதியாக எடுத்த முடிவுகள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தாலும் ஆம், முடிவுகள் கூறுவது உண்மையே என்று ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில் நாம் பலமுனை தாக்குதல்களுக்கு ஆளாகிறோம். வைரஸ் மற்றும் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றும் புரோகிராம்கள், பிரவுசர் புரோகிராமில் ஏதாவது ஒரு பிழை உள்ள இடத்தைக் கண்டுபிடித்து நுழைந்துவிடுகின்றன. இதனால் பிரவுசர்களை வழங்கியவர்கள் தொடர்ந்து பேட்ச் பைல்களை அமைத்துத் தந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றை டவுண்லோட் செய்து பிரவுசரில் இணைத்துக் கொண்டால்தான் நாம் புதிய வைரஸ்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படி அப்டேட் ஆக்கிக் கொள்ள வில்லை என்றால் நாம் பாதுகாப்பற்ற இன்டர்நெட் பிரவுசிங்தான் மேற் கொள்கிறோம். இந்த நோக்கில்தான் மேலே குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்பாடுதான் பாதுகாப்பானது என்று கண்டறிந்துள்ளனர். இதோ அந்த ஆய்வு தந்த தகவல்கள். பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் 83% பேர் பேட்ச் பைல்களுடன் தங்களை அப்டேட் செய்து கொண்டுள்ளனர். சபாரி பிரவுசர் பயன் படுத்துபவர்களில் 65.3%, ஆப்பரா – 56.1%, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் – 47.6% மட்டுமே பேட்ச் பைல்களுடன் அப்டேட் செய்துள்ளனர். அனைத்து பிரவுசர்களுமே அவ்வப்போது வரும் ஆபத்துகளின் அடிப்படையில் உடனடியாக பேட்ச் பைல்களைத் தங்கள் இணைய தளங்களில் இலவசமாகத் தரும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர்.

பிரவுசர் பேட்சிங் என்பது இன்றைய இணையப் பழக்கத்தில் இன்றியமையாத ஒரு செயல்பாடாக மாறிவிட்டது. இந்த ஆய்வு இன்னொரு உண்மையையும் கண்டறிந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு பயன்படுத்துவோர் தங்கள் பிரவுசர்களை அப்டேட் செய்வதில் சோம்பேறிகளாக உள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 7 வெளியாகி 19 மாதங்கள் கழிந்தும் 52.5% பேரே தங்கள் பிரவுசரை அப்டேட்செய்துள்ளனர். ஆனால் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் 92.2% பேர் அப்டேட் செய்துள்ளனர். இந்த ஆய்வு மேற்கொண்டவர்கள் சில பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

பிரவுசர் தொகுப்பு வழங்குபவர்கள் இந்த தேதி வரையே இது பாது காப்பானது என்று முத்திரை குத்தி அதனை அந்த நாளுக்கு முன் பயன் படுத்துபவருக்கு எச்சரிக்கையாகத் தர வேண்டும். இன்டர்நெட்டில் பயன்படுத்துபவர் இருக்கையில் அந்த பிரவுசர் தானாகத் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வசதி இருக்க வேண்டும். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதம் ஒருமுறை மட்டும் முதல் செவ்வாய்க்கிழமை அப்டேட் செய்வதனைக் குறை கூறியுள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன் படுத்தாத நிலையிலும் அது அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் ஒரு மாத கால இடைவெளி என்பது மிகவும் அதிகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக