அறிவியல் புதுமை



இல்லத்தரசிகளுக்கு ஒரு காவல்காரன்!

கரத்து வாழ்க்கை, பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வசதியானது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கோ சிறிது அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை செய்திகள் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. இதனால் பணிக்கு செல்லும் ஆண்கள்கூட அச்சப்படுவது உண்டு.

நகரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அறிமுகம் இல்லாதவராக இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட ஒருவருக்கொருவர் பழக்கம் வைத்திருப்பது அரிதாக இருக்கிறது. இதனால் கதவுகளை தாழிட்டபடி வீட்டின் உள்ளேயே மக்கள் வசிக்கிறார்கள்.

இப்படி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் ஒரு புதிய கருவி வந்திருக்கிறது. இந்தக் கருவியை கதவில் பொருத்திவிட்டால் போதும். கதவை யார் தொட்டாலும் உள்ளே இருக்கும் திரையில் அவர்களின் படம் தெரிந்துவிடும். இதனால் திருடர்கள் பயம், அறிமுகம் இல்லாதவர்கள் பற்றிய அச்சம் ஆகியவற்றைத் தவிர்த்து நாம் உஷாராகிவிடலாம்.

இந்தக் கருவியின் பெயர் 'டிஜிட்டல் பீஹோல் வியூவர்' எனப்படும். ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்ட இந்தக்கருவியில் உள்ள கேமரா லென்சுகள் படம் பிடித்தும், சென்சார்கள் அதிர்வை கண்காணித்தும் எச்சரிக்கும். இந்தக்கருவியை படம் மட்டும் காட்டும் வகையிலும் அமைக்கலாம். எச்சரிக்கை ஒலி தரும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

இரவிலும் தெளிவான படம் காட்டும் வகையில் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 10 வினாடிகளுக்கு ஒருமுறை தானாகவே `சுவிட்ச் ஆப்' ஆகிவிடும். இதனால் பேட்டரி நீண்ட நாள் உழைக்கும். திரையில் தெரியும் படங்களை பெரிதாக்கியும் பார்த்துக் கொள்ளலாம்.

இல்லத்தரசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்தக் கருவியின் விலை ரூ.6 ஆயிரத்து 700 ஆகும்.

*******************************************************************************

மொழிபெயர்க்கும் 'மூக்கு கண்ணாடி'

க்களிடையே தொடர்புக்கு அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது. அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சம் தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழி பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட, பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்றமொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழி பெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர் (மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கேமராவும், மைக்ரோபோனும் இணைந்த கருவியாகும். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும்போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும்படியாக காட்டப்படும். இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும்.

இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும்.

கருத்துரையிடுக