‘VoIP’ ஒலி-அலை உலகம்


ஒலி பரிமாற்றுச் சேவை (வொய்ப்)

புத்தம் புதிய ‘தொலைபேசி இணைப்பு’ விற்பனையில் ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்துகொண்டு  ‘வொய்ப்’ (VoIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.
இடைத்தரகரின்றி பொருட்களை விற்பதற்கும் முகவர்களை இணைப்பதற்குமென, நீண்டகாலமாக, அந்த way என்றும் இந்த star என்றும் பலவித பிரமிட் (Pyramid) முறை விற்பனைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதுபோன்று பல்வேறு திடீர் முகவர்களும் இணைந்துகொண்டு, சாதாரண நுகர்வோருக்குக் கொடுத்து வந்த தொல்லைகள் ஏராளம். புதிதாக கனடாவுக்கு வந்தவர்களை, ஒரு சில மாதங்களில் பணத்தில் மிதக்க வைக்கிறேன் வாருங்கள் என்று ‘மீட்டிங்’ற்கு அழைத்துப்போய், அடுத்த ‘மீட்டிங்’கில் மாதிரிப் பொருட்கள் என்ற போர்வையில், பையில் வைத்துக் கொடுத்துவிட்ட பல்வேறு Concentrated வகையறாக்களையும், தங்கள் பெட்டகங்களில் இன்றுவரை வைத்திருக்கும் நபர்கள் நம்மிடையே ஏராளம்பேர் உள்ளனர். சில பெயர்களைக் கேட்டாலே கொதித்துப் போய் விடுகிறார்கள் பலர். இதற்குக் காரணம், இந்த கோபுர வகையிலான இலகு பணக்காரராகும் சுருக்கமான திட்டங்களில் அவர்களுக்கு இருக்கும் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு தான்.
இப்போது ‘வொய்ப்’ (VoIP) தொலைபேசிச் சேவையில் இணையுங்கள் என்று கேட்டுவரும் தொலைபேசி முகவர்களை, அதுபோன்ற ‘திடீர் பணக்காரராகும் திட்ட’த்துடன் வருபவர்களாக எண்ணிவிடக்கூடாது. பொருட்கள் விற்கும்படியோ அல்லது பொருட்களை விற்பதற்கான முகவர்களை இணைத்து விடுங்கள் என்றோ உசுப்பேத்தி, அந்தத் திட்டத்தில் சேர்வதற்கே முன்பணம் பெற்று பணத்தில் விளைந்த நிறுவனங்கள் பலப்பல. இப்போதும் கூட, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருப்பதாக அடிக்கடி தொல்லைபேசிகள் வரத்தான் செய்கின்றன. நம்பிய பலரும், முன்பணமாக சிறிய தொகையைக் கட்டி இணைந்து கொள்ளத்தான் செய்கிறார்கள். இழப்பது 30 டொலர்கள் தானே, முயற்சித்துப் (பரீட்சித்து) பார்க்கலாம் என்று பலர் நினைத்து விடுகிறார்கள். ஆனால், பத்தாயிரம் பேர் இப்படி 30 டொலர்கள் அனுப்பி விட்டால், கேட்டுவாங்கிய நபர், 300,000 டொலர்களை இனாமாகப் பெற்று விடுகிறார் என்பதை பலரும் உணர்வதில்லை.
சரி, இந்தக் கணக்கை ஒருபுறம் வைத்துவிட்டு, வொய்ப் என்ற பெயரில் தற்போது பிரபலமடைந்திருக்கும் ஒலி சேவை பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
Voice over Internet Protocol, IP Telephony, Internet Telephony, Broadband Telephony,
Broadband Phone, Voice over Broadband, VoIP என்று இன்னோரன்ன பல பெயர்களில் அறியப்பட்ட இந்த புதிய இலத்திரனியல் ஒலிபரிமாற்றுச் சேவை, நவீன கணினி உலகில் வேகமாக வளர்ந்து பிரபலமடைந்துள்ளது.
இணைய (internet) சேவையை, அதாவது பல்வேறு இணையத் தளங்களையும் மேய்ந்து வருவதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தால், அந்த சேவைக்குப் பின்னே, ஐபி (IP) முகவரி பாவிக்கப்படுகிறதென்ற தத்துவத்தையும், இன்ரநெற் புரொட்டக்கொல் (Internet Protocol) என்ற பெயரில், இணையத் தொடர்புக்கான மொழியாக இந்த IP பயன்படுகிறதென்ற விளக்கத்தையும் நாம் அறிந்திருக்கலாம்.

சாதாரண கணினியுலகில், இணைய மொழியாக என்பதைவிட, இலத்திரனியல் மொழியாகப் பாவிக்கப்பட்டு வருகின்ற இந்த IP பாஷையை, ஒலி பரிமாற்றத்திற்கான பிறிதொரு வடிவமாக்கி, வொய்ஸ் (voice) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குரல் அதாவது ஒலிவடிவத்தை பரிமாற்றம் செய்கின்ற புதிய உத்தியை, வொய்ப் (VoIP) என்று அழைக்கிறார்கள்.

இலகு தமிழில் சுருக்கமாக விளக்குவதாக இருந்தால், தொலைபேசி அழைப்புக்களை, இன்ரநெற் ஊடாக அனுப்புவதாகவும் மீளப் பெறுவதாகவும் கொள்ளலாம். அதாவது, தொலைபேசிக்கென பாவனையிலுள்ள பிரத்தியேக தொலைபேசி இணைப்பை, இணைப்பு வலையைப் பயன்படுத்தாமல், ஒலிவடிவத்தை அப்படியே இணையத்தினூடாக பரிமாற்றம் செய்வதற்கான புதிய சேவை, இந்த VoIP என்று விளக்கலாம்.
கடந்த நூற்றாண்டை ஆட்டிப்படைத்த எழுத்தியல் பரிமாற்றங்கள் அனைத்தும், அந்த நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் கரைந்தோடி, இந்த புதிய நூற்றாண்டில் புயலாக அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு ஒலி இலத்திரனியல் உலகமாக, இந்த வொய்ப் எழுந்து வியாபித்து நிற்கிறது. குறிப்பாக, இனிவரும் காலங்களில், அதுவும் வெகு விரைவில், தொலைபேசிகளையோ, செல்லடக்கித் தொலைபேசிகளையோ காவித்திரியும் தேவை அற்றுப் போய்விடும் அளவிற்கு, அந்த தொலைபேசி வலைப்பின்னலை, இந்தப் புதிய ஒலிபேசிச் சேவை ஆக்கிரமித்து விட்டது என்பதே உண்மை.

இங்கிலாந்திலிருக்கும் நண்பர் ஒருவர், தனது தகவலொன்றை ஒலிவடிவில் கனடாவிலுள்ள தனது நண்பருக்கு அனுப்பும்போது, அந்த ஒலிவடிவத்தை, அதே ஒலிவடிவமாக காவிச்சென்று, அதே ஒலிவடிவத்தில், கனடிய நண்பரின் ஈமெயிலில் வீசிவிடுகிறது இந்த வொய்ப். ஆஹா.. இப்போது கொஞ்சம் புரிவது போலிருக்கிறதா? உண்மைதான். கணினியுலகம், குறிப்பாக நவீன இலத்திரனியல் உலகில், தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் இலத்திரனியலாக மாறியிருப்பதால், ஒரேயொரு இலத்திரனியல் கருவியில், அனைத்து கணினிப் பரிமாற்றங்களையும் செய்துகொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாகவேண்டிய கட்டாய நிலை தோன்றிவிட்டது. இத்தகைய இலத்திரனியல் கருவியில், சின்னஞ்சிறிய கணினியில், மின்னஞ்சல்களை (ஈமெயில்களை) பார்வையிட வழிகிடைக்கிறது. ஏனையவர்கள் தகவல் அனுப்பினால், அவற்றை ஒலிவடிவமாக அவர்களது மின்னஞ்சல்களிலிருந்து திறந்து கேட்க முடிகிறது. அவர்கள் அழைக்கும்போது, அதே சின்னஞ்சிறு கருவியில் பேசவும் முடிகிறது. ஆக, அத்தனை இலத்திரனியல் பணிகளையும், கையில் காவிச்செல்லும் ஒரேயொரு குட்டிக் கணினியில் லாவகமாகச் செய்துவிடலாம் என்றால், அதற்கான ஒலி-அலை சிரமங்களை சீர்செய்ய வந்திருக்கும் இளவரசனே இந்த VoIP.

தற்போது பரவலாக பாவனையிலுள்ள தொலைபேசி சேவைகளுக்கு மாற்றீடாக, இணையவலை ஊடாக (internet), தொலைபேசி (telephone), தொலைநகல் (fax) சேவைகளை வழங்குவதே குறிப்பாக இந்த VoIP என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில விரிவாக்கத்தை அவதானித்தால், Voice over Internet Protocol என்ற விளக்கத்திலிருந்து, இன்ரநெற் ஊடாக, ஒலியைப் பரிமாற்றம் செய்யும் ஊடகம் இது என்று தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.
வட அமெரிக்காவில், Vonage, Packet8, Voipnet மற்றும் Lingo போன்ற பெயர்களில் இந்த VoIP சேவை பிரபலமடைந்திருந்தாலும், ஏனைய பல இரண்டாந்தர வியாபார நிலையங்கள், VoIP சேவையை பரவலாக வழங்கிவருகின்றன. எந்தவொரு பொருளை எடுத்துக் கொண்டாலும், எவ்வளவுக்கெவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவோ, அவைகளுக்கு சவாலாக சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றை விரிவாக ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம்.

நன்மைகள்
VoIP சேவையின் பிரதான நன்மை என்று பார்த்தால், நுகர்வோருக்கு அதிக பயனைத் தரும் ஒன்றாக, இதன் மூலம் கிடைக்கும் சேமிப்பைக் குறிப்பிடலாம். இணைய சேவை மூலம் இந்த ஒலிப்பரிமாற்றம் இடம்பெறுவதால், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து அழைத்தாலும், ஏன் உலகின் எந்த மூலையிலிருந்து அழைத்தாலும், நாம் அழைக்கின்ற இடத்திலுள்ள இன்ரநெற் சேவை மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப் படுவதால், இணைப்பு இலவசமாக அல்லது உள்நாட்டு தொடர்பாக பெறுநரின் தொலைபேசிக்கு செல்கிறது. இதனால், VoIP சேவை மூலம் நிறைய சேமிப்பு கிடைக்கிறது என்பது இதன் பிரதான நன்மை என்று குறிப்பிடலாம்.
இப்படிக் கூறுவதால், இது 100 வீதம் நியாயப்படுத்தப் படுவதாக எண்ணிவிடக் கூடாது. இது என்ன புதுக் குழப்பம் என்று நீங்கள் எண்ணலாம். அதாவது, சேவை என்னவோ உள்நாட்டு இணையத் தொடர்பு மூலம் செல்வதாக இருந்தாலும், நீங்கள் யாரிடம் VoIP சேவையைப் பெறுகிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு அறவிடும் கட்டணம் பற்றிய ஒப்பந்தத்தைப் பொறுத்து, இந்த சேமிப்பு வேறுபடலாம் என்பதே நிஜம். வீட்டுத் தொலைபேசி சேவையை எந்த நிறுவனத்துடன் நாம் வைத்திருக்கிறோமோ, அந்த நிறுவனம் அறவிடும் கட்டணமே எமது தொலைபேசிக் கட்டணமாக கணிப்பிடப்படுவது போன்று, VoIP சேவையை வழங்கும் நிறுவனம், மாதக் கட்டணத்தை அறவிடுவதாக வைத்துக்கொண்டால், நாம் உலகின் எந்த மூலையிலிருந்து யாரை அழைப்பதால் எவ்வளவு சேமிப்பு கிடைக்கிறது என்ற வாதம் அற்றுப் போகிறது. மாதம் முடிந்தால், குறிப்பிட்ட தொகையை செலுத்துவது அவசியமாகிவிடுகிறது. இதற்குப் பதிலாக, நாமாக VoIP சேவையை பிரதான நிறுவனத்திடமிருந்து நேரடியாகப் பெற்றுப் பாவிக்கும் போது, இந்த சேமிப்பில் மாற்றத்தை அவதானிக்க வாய்ப்பிருக்கிறது.

VoIP சேவையின் இதர நன்மைகள் பலவற்றை இங்கே பார்க்கலாம்:
- அவசர சேவைக்கான 911 இணைப்பை அழைக்கும்போது, அந்த அழைப்பு நேரடியாக அருகே உள்ள அவசர அழைப்புக்களை ஏற்கும் முகவரிடம் நேரடியாக செல்கிறது. உதாரணமாக, மிசிசாகாவின் கிழக்கு மூலையொன்றில் நின்று 911 ஐ அழைத்தால், அந்த அழைப்பு, 911 அழைப்பிற்கான தலைமைக் காரியாலயத்தினூடாக செல்லாது, மிசிசாகாவிலுள்ள கிளை நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பு உருவாகிறது. இதற்குக் காரணம், மிசிசாகா கிழக்கிலிருந்து இன்ரநெற் சேவையூடாக இந்த அழைப்பு செல்வதுதான். இதன் மூலம் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அழைப்பு கிடைக்கும்போதே, அழைத்தவரின் இடத்தை பெறுநர்கள் அறிந்துகொள்வது தான். அவசர அழைப்பிற்கு, அவசர அவசரமாக உதவி கிடைத்துவிட இந்த VoIP சேவை உதவிவிடுகிறது.
- VoIP மூலம் புதிய தொலைபேசி இணைப்பொன்றைப் பெறும்போது, பிரதேசவாரியான இணைப்பிலக்கம் (Area Code) நீங்கள் விரும்பிய ஒரு இடத்தைத் தெரிவதற்கு வாய்ப்பு வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் வாழும் இடம் மிசிசாகாவாக இருந்தாலும், விரும்பினால் 416 என்ற பிரதேசவாரியான இணைப்பெண்ணைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. காரணம், இந்த சேவை தொலைபேசி இணைப்பினூடாக அல்லாது, இன்ரநெற் ஊடாக நடைபெறுவதுதான்.
- ஒருவர் தற்போது வைத்திருக்கும் தொலைபேசி இலக்கத்தை, VoIP சேவையில் இணைந்த பின்னரும் தொடர்ந்து வைத்திருக்க வாய்ப்பு உருவாகிறது. இதன் ஒரு மேலதிக வாய்ப்பாக, பிரதேசவாரியான இணைப்பிலக்கத்தையும் விரும்பினால் மாற்றிப் பாவிக்க வாய்ப்புக் கிட்டிவிடுகிறது.
- VoIP சேவையை வைத்திருந்தால், மின்னஞ்சல் (ஈமெயில்) மூலம் அனுப்பப்படும் தொலைபேசி தகவல்களையும், இலகுவாக தொலைபேசியில் கேட்பதற்கு வாய்ப்பு உருவாகிறது.
- தொலைபேசியில் வரும் அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத நேரங்களை, முன்கூட்டியே இடைமறித்து, அந்த நேரங்களில் வரும் அழைப்புக்கள் நேரடியாக பதிவுக்குச் செல்ல வழிசெய்யலாம். உதாரணமாக, திங்கள் முதல் வெள்ளிவரை, தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் வரும் அழைப்புக்களையும், சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பின்னர் வரும் அழைப்புக்களையும் நேரடியாக பதிவுக்கு அனுப்பும்படி ஒழுங்கமைக்க (Program) வாய்ப்பு உருவாகிறது.
- தொலைபேசியைப் பாவிக்காது, கணினி மூலமாகவும் தொலைபேசி அழைப்புக்களைப் பரீட்சிக்கவும், அழைத்தவர்கள் பட்டியலை ஆராயவும், ஏன், தொலைபேசி அழைப்புக்களை கணினியிலேயே பெறவும் மேற்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம், கணினி ஒரு தொலைபேசியாக செயற்படவும், தொலைபேசி மூலம் கணினியின் சேவைகளில் ஒன்றான, மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது.
- சாதாரண தொலைபேசி சேவைகளில், மேலதிக கட்டணத்தைச் செலுத்தினால் மட்டும் பெறக்கூடிய பல சேவைகளையும், VoIP சேவையில் இலவசமாகப் பெற முடியும். இரண்டு அழைப்புக்களை ஏற்பது (Call Waiting), அழைப்புக்களை வேறு இலக்கத்திற்கு அனுப்புவது (Call Forwarding), பலரை ஒரே அழைப்பில் இணைப்பது (3-way Calling, Conference or Group Calling), அழைப்பவர் விபரம் அறிவது (Call Display), தகவல் சேமிப்பு (Voice Mail), பதிலளிக்காவிட்டால் மாற்றி அனுப்புவது (Busy/No Answer Transfer) போன்ற பல்வேறு மேலதிக சேவைகளும், VoIP சேவையில் இலசவமாக இணைக்கப்படுகின்றன. இதற்கான காரணம், இந்த சேவை இன்ரநெற் ஊடாக வழங்கப்படுவதுதான்.
- உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும், அங்குள்ள ஒரு கணினி மூலம், VoIP அழைப்பை ஏற்படுத்த வாய்ப்புக் கிடைக்கிறது.
- தற்போது பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளில், வீதிகளில் பயணிக்கும்போது அழைப்பிலிருந்தால், சிலவேளைகளில் அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும் நிலை இருக்கிறது. அந்தந்த கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் கோபுரங்களிலிருந்து ((tower) அடுத்த கோபுரத்திற்கு இணைப்பு தாவிச்செல்லும்போது, இத்தகைய துண்டிப்புக்கள் நிகழும் சூழ்நிலைகள் தோன்றுகின்றன. ஆனால், VoIP இணைப்பைப் பொறுத்தவரை, இதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.
தீமைகள்
- வீட்டுத் தொலைபேசி அல்லது கையடக்கத் தொலைபேசியைப் பொறுத்தவரை, அழைப்பில் இருக்கும்போது மின்சாரத்தடை ஏற்பட்டாலும், அழைப்பைத் தொடரலாம். ஆனால், VoIP தொடர்பைப் பொறுத்தவரை, மின்சாரத்தடை ஏற்பட்டால், அழைப்பு துண்டிக்கப்படுவதுடன், மீண்டும் மின்சாரவசதி வரும்வரை, தொடர்பைப் பெறுவதற்கு வாய்ப்பிருக்காது.
- மின்சாரத்தடை ஏற்படும்போது VoIP தொடர்பை இழப்பதற்குக் காரணம், கணினி மூலமான இணையத் தொடர்புதான். அப்படிப் பார்க்கும்போது, இதனுடன் இணைந்ததான இன்னுமொரு தீமையாக, இணையத் தொடர்பு அதாவது இன்ரநெற் தொடர்பு இல்லாமல் போனால், VoIP தொடர்பும் இல்லாமல் போய்விடுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.
- இதற்குப் பதிலாக, வேறு யாராவது தங்களது இணையத் தொடர்பு மூலமாக இந்த VoIP சேவையை வழங்கியிருந்தால், அவர்களது இணையத் தொடர்பில் சிக்கல்கள் எழும்போது, தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.
- இன்ரநெற் தொடர்புக்கான வாய்ப்பு இல்லாத ஒரு இடத்தில் அல்லது பிரதேசத்தில், VoIP பிரயோசனமற்ற ஒரு சாதனமாக மாறிவிடுகிறது. தொடர்புக் கோபுரமற்ற இடத்தில், கையடக்க தொலைபேசியின் நிலையும் அதுதான் என்ற வாதம் நியாயமானதாக இருந்தாலும், வடஅமெரிக்காவைப் பொறுத்தவரை, அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றது.
- VoIP தொடர்புக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட IP தொலைபேசிகள் (IP Phones) தேவைப்படுகின்றன. இந்த தொலைபேசி தவிர, VoIP பாவனைக்கான மென்பொருள் (VoIP Software), ATA என்றழைக்கப்படும் விசேட தொடுப்பி (adaptor) போன்றன தேவைப்படுகின்றன. மேலதிகமாக, இணையத் தொடர்பு (இன்ரநெற் connection) இருப்பது அவசியம், அவை அதிவேகமுள்ள (High Speed) கேபிள் (cable), Satellite அல்லது DSL தொடர்புள்ள இணைப்புக்களாக இருப்பதும் அவசியம்.
- இணைப்பை ஏற்படுத்தும்போது, அந்த இணைப்பு பயன்படுத்துகின்ற இணையத்தொடர்பும் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இணையத் தொடர்பில் ஏற்படுகின்ற குறைகள், குழப்பங்கள், தளம்பல்கள், VoIP தொடர்பையும் ஏககாலத்தில் பாதிக்கவே செய்யும். இணையத் தொடர்பை வழங்கும் நிறுவனத்தின் சேவையின் தரத்தைப் பொறுத்தே, தொலைபேசி அழைப்பின் தெளிவும் இருக்கிறது.
- தொலைநகல் அனுப்புவது தொடர்பாகவும், VoIP சேவையில் நீடிக்கும் குழப்பங்கள் இன்னும் நீங்கிய பாடாக இல்லை. இருப்பினும், இந்த சிக்கலை நீக்குவதற்காக, FoIP என்ற பெயரில், இன்ரநெற் ஊடாக தொலைநகல் (Fax over IP) சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்த சேவையை T.38 protocol என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
- எல்லாவற்றையும்விட சிக்கலான பிரச்சனையாக உருவாகிவிடக்கூடிய VoIP சூழ்நிலையாகக் கருதப்படுவது, 911 அழைப்பு குறித்தது தான். அதாவது, ஒரு பக்கத்தில் எங்கிருந்தும் அருகிலுள்ள அவசர அழைப்பு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு உருவாகுகிறது என்பது சாதகமாக நிலைமையாக இருந்தாலும், மறு பக்கத்தில், மின்சாரசக்தி இல்லாத சூழ்நிலையுடன் கூடிய ஒரு மிக அவசர அல்லது ஆபத்தான சூழ்நிலை உருவாகும்போது, இந்த VoIP தொலைபேசியும் முற்றாக செயலிழந்து போவதால், தொலைபேசி அழைப்பை வேறு வழியில் உருவாக்கும் ஒரு உதிரி சேவை இருந்தால் ஒழிய, உலகத்துடனான அத்தனை தொடர்புகளும் அற்றதொரு சூழல் உருவாகிவிடும் வாய்ப்பு எதிர்பாராமல் நிகழ்ந்துவிட, இந்த VoIP ஒரு காரணமாகிவிடலாம்.
இதன் காரணமாகவே, VoIP நிறுவனங்கள் E911 என்ற பிரத்தியேக சேவையொன்றை அறிமுகம் செய்யும்படி அமெரிக்கா கட்டாயப்படுத்துகிறது. இந்த E911 சேவை மூலம், முற்றுமுழுதாக மின்சார சக்தியோ அல்லது இன்ரநெற் தொடர்போ இழக்கப்பட்டாலும், 911 அவசரத் தொடர்பை, VoIP தொலைபேசியின் சேமிப்பு சக்தியூடாக எங்கிருந்தும் மேற்கொள்வதற்கு ஒரு வசதி உருவாக்கப்பட வேண்டுமென கோரப்படுகிறது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை VoIP நிறுவனங்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து வருவதனால், இதுவரை தீர்வொன்று எட்டப்படவில்லை.

VoIP ஒலி-அலை சேவையின் வரலாற்றைப் பார்க்கலாம்:
70களில் இராணுவ புலனாய்வுத் துறையின் தகவல் பரிமாற்றத்திற்கென பிரத்தியேகமாகப் பாவிக்கப்பட்ட ஆர்ப்பநெற்.சிஈ (ARPANET.ce) என்ற இன்ரநெற் வழங்கியின் இலத்திரனியல் மொழியை, ஒலிவடிவமாக மாற்றீடு செய்வதற்கென, 1973ல் இந்த IP மூலமான பரீட்சார்த்த முயற்சிகள் ஆரம்பித்தன. இந்த ஆராய்ச்சிகள் உடனடியாக வெற்றியளித்த போதிலும், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உடனடிப் பலாபலன்களை நுகர்வோர் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தது. சாதாரண பாவனையாளர்களின் வீடுகளில் பொதுவாக இணையத் தொடர்பு இருக்கவில்லை. கணினி வசதிகள், கேபிள் தொடர்பு வசதிகள் உட்பட, அதிக விலைகொடுத்து VoIP சேவைக்கான விசேட கருவிகளை மேலதிகமாகப் பெறுவதற்கும் யாரும் தயாராக இருக்கவில்லை. இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இதன் பாவனை தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டது.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று, தற்போதெல்லாம் சாதாரண தொலைபேசிக்கு அழைப்புக்களை அனுப்பும் வகையில், சில மாற்றீட்டுக் கருவிகள் (Convert Terminal) பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண தொலைபேசியிலிருந்து, இந்தவகை மாற்றீட்டுக் கருவிகளுக்கு அனுப்பப்படும் தொடர்பு, கணினித் தகவலுக்குரிய பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்டு, கணினியின் இணைப்புக் கருவிக்கு ((router) செல்கிறது. அங்கிருந்து, இன்ரநெற் தொடர்புக்கு செல்கிறது தகவல். சுருக்கமாகச் சொன்னால், பயன்பாட்டிலுள்ள இன்ரநெற் மூலமாக தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம்.

ஏற்கனவே பார்த்ததைப் போன்று, இத்தகைய சேவையை வழங்குவதற்கென பல்வேறு நிறுவனங்களும் தொழிற்படுகின்றன. வட அமெரிக்காவில், Vonage, Packet8, Voipnet மற்றும் Lingo போன்ற பல்வேறு நிறுவனங்கள், இந்த VoIP சேவையை வழங்குகின்றன. கனடாவில், மேலே குறிப்பிட்டவை உட்பட, Primus, Nortel, Acanac போன்றனவும், இதர பல இரண்டாந்தர வியாபார நிலையங்களும், VoIP சேவையை பரவலாக வழங்கிவருகின்றன.

VoIP சேவை, எதிர்கால ஒலி-பரிமாற்று உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக நம்பப்படுகிறது. இருப்பினும், வீட்டுப் பாவனை, வர்த்தக ரீதியான பாவனை, வீட்டுக்கு வெளியிலான தானியங்கி பாவனை என்ற மூன்று நிலைகளிலும், தொழில்நுட்பக் குழப்பங்கள் அற்ற பாவனை நிலை வரும்வரை, VoIP ன் எழுச்சி நிலை, ஒரு போராட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தற்போது பரவலாக ஒலி உலகில் பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளின் தொடர்பகப் பாலமான Cellular Networks (செல்லடக்கிக்கான பன்முகத் தொடர்பக இணைப்பகம்) பயன்படுத்திவரும் 3G என்ற தொடர்பக நிலைக்கு, VoIP சேவையின் தொடர்புகளும் உயர்த்தப்படுவது அவசியம். VoIP தொலைபேசிகளின் தொடர்பை, ‘dual mode’ என்றழைக்கப்படும் ‘இணை பாவனை’ நிலைக்கு, அதாவது Cellular Network இலும் Wifi Network இலும் இலத்திரனியல் மாற்றீடின்றி பாவிக்கக்கூடிய ஒரு சாதக நிலை உருவாக்கப்பட வேண்டும். WiFi என்றழைக்கப்படும் இணை நிலைக்கு, அதாவது செல்லடக்கிகளையும் VoIP தொலைபேசிகளையும் ஒரே தொழில்நுட்பத்தில் பாவிக்கத்தக்க பொதுநிலைக்குக் கொண்டுவந்தால், VoIP தொலைபேசியின் பாவனை, பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பன்முக செயற்திறன் (multi-tasking) கொண்டவர்களாக, இலத்திரனியல் அலுவலகத்தை (Virtual Office) நடைமுறைப் பாவனையாகக் கொண்டு, தனது கையிலுள்ள ‘நடமாடும் கணினியும்’ கையடக்க தொலைபேசியும், காற்றலை இணையத் தொடர்பும் ((wireless internet) மட்டுமே ஒரு அலுவலகமாக மாறிவிட்ட இந்த நவீன இலத்திரனியல் உலகில், உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் இலகுவாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான, குறிப்பாக, அனைத்துப் பணிகளையும் ஒரேயொரு இணையத் தொடர்பின் மூலம் மட்டுமே மேற்கொள்ளத்தக்க ஒரு இலகு செயல்முறை உதயமாக வேண்டும் என்பதில், கடும் உழைப்பாளிகள் அதீத அக்கறை கொண்டுள்ளார்கள். அதற்கான தீர்வாக இந்த VoIP வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, VoIP தொடர்புலகம், ஒலி-அலை உலகை ஆக்கிரமித்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.

கருத்துரையிடுக