ப்ரொக்சி என்பது என்ன ? (Proxy)



வகுப்பறையில் வருகைப் பதிவேட்டுக்குத் தான் மாணவர்கள் proxy  கொடுப்பதைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
அகராதியில் (Dictionary) பார்க்கும் போது அதற்கு பிரதிநிதி, உரிமை பெற்ற பிரதிநிதி என்று இருந்தது. அதனால், ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் அவரது அடையாளத்தைப் பயன்படுத்தி, அவருக்கான வேலையைச் செய்வது என்று பொருள் கொள்ளலாம். 

இப்போது இணைய உலகில் அதற்கான அர்த்தத்தைப் பார்ப்போம். நாம் இணையத்தில் செய்யும் எல்லா வேலையும், IP Address மூலமே செயல் படுகிறது. இணையமே ஒரு பெரிய அளவில் உள்ள ஒரு கட்டமைப்பு (Network) தான். எந்த கட்டமைப்பும் ஒரு கணினியை தனது கட்டமைப்பில் சேரும் போது இந்த IP Address மிகவும் முக்கியமானது. இதைக் கொண்டே அது அந்த கட்டமைப்பில் அடையாளம் செய்து கொள்கிறது. ஏறக் குறைய துருப்புச் சீட்டு என்று கூறலாம்.



நாம் ஏதாவது வலைப் பக்கத்தை திறக்கும் போது நமது கணினி அந்த வலைப் பக்கத்தின் வழங்கியை (Server) தொடர்பு கொள்ளும் போது நமது IP Address ஏ அதற்கு அடையாளமாக இருக்கிறது. சில Dialup இணைப்புகளில் ஒரே  IP Address இருக்காது. அப்போது கூட நமது அடையாளங்கள் எப்படி தெரிகின்றன என்று கேட்கலாம். அது வேறு தொழில் நுட்பம், கூகீஸ்.

இப்போது நாம் கணினியில் இணையத்தில் செய்யும் எல்லா வேலையும் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்பதற்கு அடையாளமே இந்த IP Address தான்.

எனவே, இணைய வலையத்தில் நீங்கள் தன்னிச்சையாக உலவினாலும், உங்கள் எல்லா செயல்களையும், இந்த IP Address மூலம் உளவு பார்க்க முடியும்.

இதற்காகவே உங்கள் உலவலை ஒரு Proxy மூலம் செய்தால், நீங்கள் எந்த எந்த பக்ககளைப் பார்க்கிறீர்கள் என்பதை சேகரிக்க முடியாது. அதாவது, முதலில் அந்த வலைப் பக்கத்தை proxy தனது IP Address மூலம் இறக்கி உங்களுக்கு அனுப்புவதால், அந்த வலை வழங்கிக்கு (Web server) உங்கள் IP Address மறைக்கப் பட்டு விடும். ஆனால் சட்டரீதியான விசாரணை வரும் போது  எல்லா உலவல் தகவல்களும், proxy வழங்கியில் (server) சேமிக்கப் பட்டிருந்தால், அப்போதும், அவரைப் பிடிக்க முடியும்.

மேலும் ஒரு சிக்கல் உள்ளது. நம்பகமான proxy இல்லையென்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும் களவாடப் படலாம்.

Proxy ஐ உங்கள் கணினியில் அமைக்க உங்களுக்கு நிர்வாகிக் கணக்கு (Administrator account) இருக்க வேண்டும், இல்லாதவர்கள் வலை மூலம் (Web based) உள்ள proxy களை உபயோகிக்கலாம்.

இதற்காகவே சில வலைப் பக்கங்கள் உள்ளன. அவற்றில் பதிந்து விட்டால் புதுப் புது proxy வலை முகவரிகளை உங்களுக்கு தினம் தினம் அனுப்புவர். 

மேலும் சில கல்லூரி, அலுவலகங்களில் பல வலை முகவரிகளை தடை செய்து வைத்திருப்பர்.  அவற்றை இந்த வலை மூலம் (Web based) உள்ள proxy களை உபயோகித்து திறக்கலாம்.

கடைசியாக எந்த proxy யிலும் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை இடாமல் (வங்கிக் கணக்கு / மின்னஞ்சல் ) இருப்பது நல்லது.அல்லது நல்ல வலைப் பக்கங்களையே பார்ப்பதும், எச்சரிக்கையாக இருப்பதும் அதை விட சாலச் சிறந்தது.

கருத்துரையிடுக