"USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை கேமராவில் ஃபிலிம் போடணும் பின் அதை சரியாக இணைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் ஃபிளாஷ் மட்டும் தான் ஆகிட்டு இருக்கும் ஃபோட்டோ எடுத்து இருக்காது, பின் அதை கழுவ கொடுத்து அதில் எது நன்றாக வந்துள்ளதோ அதை பிரிண்ட் போடுவோம்.


தற்போது நிலைமை தலைகீழ் நவீன உலகத்தில் ஃபிலிம் எல்லாம் அதிசய பொருளாகி விட்டது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு. நவீன உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிமை படுத்துவதை போல பல சிக்கல்களையும் உடன் கொண்டு வந்து விடுகிறது. யார் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் யாருடைய உதவியும் இன்றி படம் எடுக்கலாம் என்று ஆகி விட்டது. பிரிண்ட் போட்டு தான் நாம் படம் எடுத்ததை பார்க்க முடியும் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது. இதுவே பலரை தைரியமாக தவறு செய்ய தூண்டுகிறது.

டிஜிட்டல் கேமராவால் ஏற்படும் பிரச்சனைகளை விகடன் தனது பத்திரிக்கையில் ஏற்கனவே இது பற்றி விலாவாரியாக கட்டுரை எழுதி அனைவரையும் எச்சரிக்கை செய்து இருந்தது, இதோடு என் அனுபவத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த வாரம் என் மகனின் படத்தை பிரிண்ட் போடுவதற்காக என்னுடைய USB ஸ்டிக்கில் உள்ள மற்ற அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு (தேட சிரமமாக இருக்கும் என்பதால்) பிரிண்ட் போட போகும் படத்தை மட்டும் காபி செய்து கொண்டு உடனடியாக (Instant) பிரிண்ட் போட்டு தரும் கடையில் சென்று கொடுத்தேன்.

நான் USB ஸ்டிக் கொடுத்து அவர்களுடைய Preview பார்க்கும் ஃபோட்டோ இயந்திரத்தில் அதை சொருகிய பிறகு நான் எப்போதோ டெலீட் செய்த படங்கள் எல்லாம் காட்ட எனக்கு அதிர்ச்சி ஆகி விட்டது.

எனக்கு இது வரை இதற்கென்று தனியாக உள்ள மென்பொருளை பயன்படுத்தினால் மட்டுமே டெலீட் செய்த கோப்புகளை பார்க்க முடியும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதில் எதையும் பயன்படுத்தாமல் அப்படியே அனைத்து தகவல்களையும் உடனே காட்டியது (ஒருவேளை இதில் ஏற்கனவே அதை போல மென்பொருள் உள்ளதா என்பது தெரியவில்லை). ஓரளவு இதை பற்றிய தொழில்நுட்பம் அறிந்து இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் இதை பற்றி எல்லாம் எதுவுமே தெரியாதவர்கள் நிலையை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

இதை நான் இங்கு கூற காரணம், தற்போது காதலர்கள், கணவன் மனைவிகள், மற்றும் ஒரு சில சிற்றின்ப காதலர்கள்!! என்று பலர் தாங்கள் மட்டும் பார்த்து ரசிப்பதற்காக தங்களை "ஏடாகூடமாக" படம் எடுத்து வைத்து கொள்கிறார்கள். இவர்கள் தாங்கள் டெலீட் செய்து விட்டதாக நினைத்து வேறு படங்களை பிரிண்ட் போட USB ஸ்டிக்கை கொடுத்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.

இதை வைத்து அவர்கள் மிரட்டப்படலாம், இந்த படங்கள் இணையத்தில் விடப்படலாம் (உங்கள் அனைவருக்கும் தெரியும் இதை போன்ற படங்கள் மின்னஞ்சலில் எப்படி காட்டு தீயாக பார்வர்டு ஆகும் என்பது), இணையத்தில் இதை போன்ற படங்களை வீடியோக்களை நல்ல விலைக்கு வாங்க இதற்கென்றே பல கும்பல்கள் உண்டு. விஷயம் வெளியே தெரிந்தால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை, அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது.

இதை போல எடுக்கப்பட்ட பல படங்கள் இணையத்தில் உலா வருகிறது, வீடியோக்கள் உட்பட. பள்ளி, கல்லூரி, அலுவலக, குடும்ப பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் என்று பீதியை கிளப்புகிறது. இவர்களுக்கெல்லாம் அறிவே கிடையாதோ! என்று தான் நினைக்க தோன்றுகிறது. நாளை இது அனைவருக்கும் தெரிந்து அந்த பெண் உட்பட அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லையா! எப்படி இதை போல முட்டாள் தனமாக குறிப்பாக தைரியமாக படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆண்களுக்கு பிரச்சனை இல்லை நம் சமூகம் பெரிதாக கருதாது ஆனால் பெண்களின் நிலைமை!!

தற்போது நண்பர்களிடையே அடல்ட் படங்கள் உலா வருவது சகஜம், ஒருவரிடையே உள்ள லேப்டாப், டெஸ்க்டாப், USB ஸ்டிக் அல்லது மின்னஞ்சலில் என்று ஏதாவது ஒன்றில் ஒரு அடல்ட் படமாவது இல்லாமல் இருப்பது மிக அதிசயமான சம்பவம் ஆகும், அது நண்பர்களிடம் இருந்து வந்ததாகவும் இருக்கலாம் அல்லது தாங்களே தரவிறக்கம் செய்ததாகவும் இருக்கலாம். இதை தவறு என்று கொடி பிடிக்க வரவில்லை, அதை கூற நான் உத்தமனும் அல்ல.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்னொரு பக்கம் உண்டு, இரகசியம் இல்லாத மனிதன் கிடையாது, ஆனால் நாம் எப்படி தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் ஏமாந்து விடுவோம். ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் குருட்டு தைரியத்தில் இருப்பவர்களை என்னவென்று சொல்வது. எனவே இதை போல படங்களை எடுக்காதீர்கள், எடுக்க அனுமதிக்காதீர்கள் அப்படியே எடுத்தாலும் மிக எச்சரிக்கையாக இருங்கள், தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

கருத்துரையிடுக