கேள்வி - பதில்

கேள்வி: கம்ப்யூட்டர் கட்டமைப்பில் சவுண்ட் கார்டு, கிராபிக் கார்டு மற்றும் பல கார்டுகள் குறித்து அடிக்கடி எழுதுகிறீர்கள். இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன? அட் லீஸ்ட், சுருக்கமாகவாவது விளக்கம் தரவும்.
–அ.ம. அதாவுல்லா - கல்முனை - 5
பதில்: பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் பலவகையான கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில அதன் கட்டமைப்பில் அடிப்படைப் பயனைத் தருவதாக அமைகின்றன. சில, தேவைப் பட்டால் வாங்கி இணைத்துப் பயன் தருவதாக உள்ளன. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் மற்றும் நெட்வொர்க் கார்ட் கூட இணைக்கப்பட்டே வரலாம். அல்லது இப்போது கிடைக்கும் நவீன கம்ப்யூட்டர்களில் இவை மதர்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டே கிடைக்கின்றன. இவை குறித்து நீங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.
வீடியோ கார்ட்: இதனை கிராபிக்ஸ் அடாப்டர், டிஸ்பிளே அடாப்டர் அல்லது வீடியோ அடாப்டர் என்றும் கூறுவார்கள். திரையில் தகவல்களைக் காட்ட பயன்படுத்தப்படும் சிறிய சர்க்யூட் போர்டு. நீங்கள் உங்கள் மானிட்டர் திரைக்கென அமைத்திடும் ரெசல்யூசன், வண்ணங்களின் எண்ணிக்கை, மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் ஆகிய அனைத்தும் வீடியோ கார்டின் திறன் மற்றும் மானிட்டரின் வரையறைகளைப் பொருத்து செட் செய்யப்படும்.
சவுண்ட் கார்ட்: பேசுவது அல்லது ஒலியை வாங்கிப் பதிய மைக்ரோபோன் இணைப்பு, ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் இணைப்பு அல்லது ஒலியை வெளியே தரத்தேவையான இணைப்பு வழி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் பெரும்பாலானவற்றில் MIDI கண்ட்ரோலர்கள் இருக்கும்.
நெட் வொர்க் இன்டர்பேஸ் கார்ட்: இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக "NIC"  எனவும் அழைப்பார்கள். இதனைக் கம்ப்யூட்டரில் இணைத்தால், நெட்வொர்க் ஒன்றுடன் கம்ப்யூட்டரை இதன் வழி இணைக்கலாம்.
பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், அதன் விலையைக் குறைப்பதற்காக, இந்த கார்டுகளில் குறைவான திறன் கொண்டவற்றை இணைத்துத் தருவார்கள். உங்கள் கம்ப்யூட்டர் சிப்பின் திறன் பார்த்து, அவற்றின் இடத்தில் வேறு கூடுதல் திறனுள்ள கார்டுகளை வாங்கி, இணைத்துப் பயன்படுத்தி, கூடுதல் வசதிகளைப் பெறலாம்.


கேள்வி: நான் விண்டோஸ் விஸ்டா வைத்திருக்கிறேன். என் கம்ப்யூட்டரில் அதனுடன் வந்த பல கேம்ஸ்கள் (Solitaire, Free Cell and Minesweeper)  இருக்கின்றன. இவை எனக்குத் தேவை இல்லை. சிஸ்டத்துடன் வந்ததனால் இவற்றை நீக்கலாமா? எப்படி நீக்கலாம்?
–கே.நிர்மலா,  மட்டக்களப்பு.

பதில்: நீங்கள் குறிப்பிடும் கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டம் இயங்கும் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது. Start>Control Panel செல்லவும். பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் "Turn Windows Features On or Off"  என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் உள்ள "Games"  என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும். பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம். என்ன இருந்தாலும் கேம்ஸ் இல்லாத ஒரு கம்ப்யூட்டரா என்று உங்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் சண்டைக்கு வரலாம். எதற்கும் அவர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.


கேள்வி: கேப்ஸ் லாக் கீ நம்மை அறியாமல் அழுத்தப்படுகையில் சிறிய அளவில் ஒலி கேட்கும் வகையில் செட் செய்வது எப்படி என்பதைத் தயவு செய்து விளக்கவும்.
–யு. காலித் - சாய்ந்தமருது, கல்முனை

பதில்: நீங்கள் கேட்கும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ளது. கேப்ஸ் லாக் மட்டுமின்றி, Num Lock  மற்றும் Scroll Lock key  ஆகியவற்றையும் அழுத்துகையில் ஒலி ஏற்படும். இதனால் நாம் பெரிய டாகுமெண்ட்களை வேக வேகமாக டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்துவது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதனை எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படலாம். இந்த கீகளுக்கும், குறிப்பிட்ட இந்த வசதிக்கும் டாகிள் கீஸ் (Toggle Keys)  என்று பெயர். இதனை இயக்க ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து அதில் Accessibility Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Accessibility Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள பிரிவுகளில் Toggle Keys என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு Use Toggle Keys என்று உள்ள இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


கேள்வி: கட், டெலீட், பேக் ஸ்பேஸ் இவற்றில் எதை அழுத்தினாலும் அது பின் நோக்கியோ அல்லது கர்சர் தேர்ந்தெடுத்தனையோ அழிக்கிறது. இதில் என்ன வேறுபாடு உள்ளது? விளக்கவும்.
– எம்.எச்.எம். நிலாம், மாவனல்லை.
பதில்
: அடிப்படையில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இவற்றின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு உள்ளது. இங்கு அதனைப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட்(CutCtrl+C) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது. அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace) பயன் படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்து விடுகிறது. இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்


கேள்வி: வேர்டில் உள்ள டேபிளில் காணப்படும் டேட்டாவினைக் கொண்டு, அதனை ஒரு சார்ட் ஆக மாற்றமுடியுமா? அதற்கான பார்முலா என்ன? புதிய வேர்ட் தொகுப்பில் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியுமா என்றும் தகவல் கொடுக்கவும்.
–எஸ். மாஹிர் - கொழும்பு
பதில்: தாராளமாக மாற்றலாம். இதற்கு பார்முலா இல்லை. சில மெனுக்கள் சென்று மாற்றலாம். வேர்ட் 97 முதல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. வேர்டில் உள்ள நீங்கள் குறிப்பிடும் அட்டவணையில் எண்களில் டேட்டா தரப்பட்டிருக்க வேண்டும்.
1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types)  என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart   என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக் காட்டாக Microsoft Graph 2000 Chart  என இருக்கலாம்.
4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.
5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற் கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.
6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.

கேள்வி : =rand(5,4) என்ற கட்டளை வேர்ட் தொகுப்பில் எதற்குப் பயன்படுகிறது? நான் இதனைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
–எம். நிஸாம், வீரமுனை, சம்மாந்துறை 
பதில்: இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்த்திருக் கலாமே. இது உங்களுக்கு டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன் பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள். அதற்கு டெக்ஸ்ட் வேண்டும். இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும். இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது. முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது. அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

கேள்வி: பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில் டேப் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. இதில் ஒரு டேப்பில் உள்ள தளத்திலிருந்து இன்னொரு டேப்பிற்குச் செல்ல மவுஸ் கர்சரைத்தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஷார்ட்கட் கீகள் உள்ளனவா?
–ஏ. கா. மனாசிர், தெஹிவலை.
பதில்: டேப்களை ஒன்றுக்கு மேல் திறந்த பின்னர், Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab  பயன்படுத்தி டேப்களுக்கிடையே நீங்கள் மாறிக் கொள்ளலாம்.

1 கருத்துகள்

  1. விண்டோஸ் எக்ஸ்பி எனது கணினியாகும், எனது தொலைதூர நண்பர்களுடன் ஸ்கைப் மூலம் ekalappai வசதியைப் பயன்படுத்தி தமிழ் மொழி மூலம் தொடர்பு கொள்கின்றேன், அரட்டைப் பகுதியில் நண்பர்கள் எனக்கு தமிழில் எழுதி அனுப்பும் தகவல்களை என்னால் வாசிக்க முடியவில்லை, அனைத்து எழுத்துக்களும் பெட்டி வடிவத்திலே காணப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்வது எப்படியென அறியத் தருவீர்களா?

    விஸ்டா கணினியில் ஈகலப்பை வசதி மூலம் ஸ்கைப் பயன்படுத்தும் போது தமிழை எவ்வித தடங்கலுமின்றி வாசிக்க முடிகின்றது.

    தங்களின் இந்த புளொக் அருமையாக இருக்கின்றது, தங்கள் பணி இன்னும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    அன்புடன் சௌந்தர், திருக்கோவில்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக