பரீட்சார்த்திக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?

 வழிகாட்டல் ஆலோசனையானது உண்மையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரும் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படப்போகிறது என்ற அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னரும் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வெற்றி தோல்விகளை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

ஏனெனில் ஒவ்வொரு பரீட்சை முடிவுகளும் வெளியிடப்பட்ட பின்னர் மனதை நெகிழ வைக்கக்கூடிய சம்பவங்கள் பல கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு இந்த வழிகாட்டல் ஆலோசனைகள்  3 கட்டமாக மேற்கொள்ளப்படுவதானது மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மன அழுத்தம் போன்ற உள்ளத்துடன் தொடர்புபட்ட பல கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் என்பது யதார்த்தமாகும்.



ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பாடசாலைகளிலும் வழிகாட்டல் மற்றும்  உள ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுக்காக சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களா என்பது  ஒருபுறமிருக்க  இவர்களினால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் வழிகாட்டல் மற்றும்  உளவளத்துணை செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடாத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் சமகாலத்தில் எழுப்பப்படுகின்றன. பாடசாலைகளிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உளவளத்துணை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக  அமையவில்லை  என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. 

குறிப்பாக பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும்  உளவளத்துணை செயற்பாடானது தொழில்வாண்மை  உளவளத்துணையாளர்களினால் முன்னெடுக்கப்படுவதில்லை. ஓரிரு மாதகால உளவளத் துணைக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவர்களினால் இத்தகைய சேவை முன்னெடுக்கப்படுவதானது அச்செயற்பாடுகளில் வினைத்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் எதிர்பார்க்கின்ற வெற்றியையும் அளிப்பதாக அமையவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இதன் நிமித்தம் பாடசாலைகளில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் தொழில்வாண்மை தகைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

அதனால் கல்வி வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற வெற்றி தோல்விகள் அவர்களது எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான சிறந்த வழிகாட்டல்களும்  உளவளத்துணை வழங்கல்களும் அவசியமாகிறது. இவை அவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மாத்திரமன்றி முழு வாழ்க்கை பயணத்திலும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமாகும்.

 

கருத்துரையிடுக