உங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா?




கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புள்ளது
கணினி அளவுக்கதிகமாக வெப்பமடைகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்பமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.

கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப் பட்டிருக்கும் ஹீட் சிங்க் (heat sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளி விடக் கூடிய கணினியின் வேறு பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்பமடைவதற்ககான பொதுவான காரணியாகும்.
கணினி வெப்பமடையும்போது அதனைக் குளிர வைக்கக கூடிய வகையில் முறையாகக் கணினி வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக் குறைபாடு இல்லை எனலாம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது இதன் காரணமாகவும் சீபியூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது. கணினி அதிக வெப்பமடைவதால் கணினி மதர்போட் சேதமடைவதோடு சீபீயு மற்றும் விடியோ காட் கூட பாதிக்கப்படலாம். அது தவிர அதிக வெப்ப மடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். எனவே கணினியைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம். சரி. கணினியைக் குளிர்ச்சியாக வைக்க என்ன செய்யலாம்?
கணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள்

மின் வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப் பட்டிருக்கும் விசிரிகளிலிருந்து அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங்கள்.
சிபியுவின் மேல் உள்ள ஹீட் சிங்கில் தடவப்படும் (thermal grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து விடுவதாலும் சீபீயூ வெப்பமடைவது அதிகரிக்கும். எனவே அதனை அவதானித்து அதன் மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள்.

கணினி சிஸ்டம் யூனிட்டை (system Unit) திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள். திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் Case திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது.

அதிக வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக் கூடிய இடங்களிலிருந்து கணினியை நகர்த்தி விடுங்கள். வெப்பம் வெளியேறத் தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள ஓர் இடத்தில் வையுங்கள்.
கனினியின் உள்ளே குளிர் காற்றை செலுத்தக் கூடியவாறும் உள்ளேயிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றக் கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப் பொருத்திக் கொள்ளுங்கள்.
"
தற்போது பயன்பாட்டிலுள்ள அனேகமான மதர்போர்டுகளில் வெப்ப நிலையை கண்டறியக் கூடிய வெப்ப உணரிகள் (sensors) சீபியுவின் கீழ், ஹாட் டிஸ்கின் அருகில், மற்றும் வெப்பத்தை வெளி விடக் கூடிய வேறு உள்ளுறுப்புக்ளின் அருகே பொருத்தப்பட்டுள்ளன.

கணினி மதர்போர்டிலுள்ள பயோஸ் (BIOS) எனும் சிப், சிபியூவினால் (CPU) தாங்கக் கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து அதற்கு மேல் வெப்பம் அதிகரிக்கும்போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதன் மூலம் கணினியின் முக்கிய பாகங்கள சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. உங்கள் கணினி அடிக்கடி இயக்கம் நின்று போகுமானால் கணினியின் வெப்ப நிலையை அளவிட்டு அதனைக் குறைப்பதற்கான முயற்சியை மேற் கொள்ளுங்கள்.

கணினி வெப்ப நிலையை அறிவதற்கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்பதில்லை. எனினும் ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளன. சில மென்பொருள் கருவிகள் வெப்ப நிலையை கண்டறிவது மட்டுமல்லாமல் அதனைக் குறைப்பதற்கான வசதியையும் தருகின்றன.

அவற்றுள் SpeedFAN எனபது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தும் மின் சக்தியின் அளவுகளையும் அளவிடுவதோடு சீபீயுவைக் குளிர்விக்கும் விசிரியின் (cooling fan) வேகத்தையும் கட்டுப் படுத்துகிறது.

கருத்துரையிடுக