பாம்புக்கடி தொடர்பான பல்வேறு விளக்கம்

உலகளவில் பாம்புக் கடியால் பலர் இறந்து வரும் நிலையில், அப்படியான இறப்புகளளை குறைக்கும் நோக்கிலும், பாம்புக் கடியின் விஷத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்டு செயற்பட முடியாத நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வகை பாம்புகள்
விஷப் பாம்புகள் குறித்த ஐ நா வின் இணைய தளம் அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 25 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சுமார் 2,500 பேர் இறக்கவும் நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
கடுமையான விஷம் கொண்ட பல பாம்புகள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.
ஆனால் எல்லா பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான விஷமுறிவு மருந்துகள் செயற்படாது.
இந்த மாதிரியான சிக்கலான நேரங்களில், பாம்புக் கடிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.
பல நேரங்களில் இந்த இணையதளம் உயிர்காக்கவும் உதவும்.
இந்த இணையதளத்தில் உலகிலுள்ள அனைத்து விஷப் பாம்புகள் குறித்த தகவல்களும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
சரியான விஷமுறிவு மருந்து மரணத்தை தடுக்கும்
எந்தப் பாம்புகள் எந்த நாட்டில் இருக்கின்றன, அவை கடித்தால் என்ன வகையான விஷமுறிவு மருந்துகள் தேவைப்படும் என்பது தொடர்பான அறிவுரைகளும் அந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
எந்தப் பாம்பையும் பார்த்தவுடன் அது விஷமுடையதா என்பதை அறிவது கடினம்

பாம்புக்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக சரியான விஷமுறிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், அப்படியான கடிகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அரசுகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில், தமது நாடுகளின் எந்த வகையான விஷ பாம்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு என்ன வகையான விஷமுறிவு வகைகள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டு அரசுகள் அந்த மருந்துகளை போதிய அளவில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல பாகங்களில் பாம்புக் கடியால் ஏற்படும் பிரச்சினைகள் சுகாதாரத்துறையால் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
பல நாடுகளில் தரமற்ற மற்றும் சரியான நோய் எதிர்ப்பு மருந்துகள் இல்லாது இருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அதன் செயற்திறனை நம்பாத நிலையும் உள்ளது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது. 

புள்ளி விபரங்கள் இல்லை
பல நாடுகளில் பாம்புக்கடிகள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.
பல்வகை விஷப் பாம்புகள்
பல்வகை விஷப் பாம்புகள்

இதன் காரணமாக தேவையான அளவுக்கு விஷமுறிவு மருந்துகளை அந்தந்த நாடுகள் திட்டமிட்டு வாங்கமுடியாத நிலை ஏற்படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால் பல சந்தர்ப்பங்களில் விஷமுறிவு மருந்துகளை தயாரிப்பவர்கள் அதன் விலையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் மருந்து தயாரிப்பையே அந்த நிறுவனங்கள் நிறுத்தியும் விடுகின்றன.
இந்தப் பிரச்சினைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கான விஷமுறிவு மருந்துகளின் விநியோகத்தையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாம்புக் கடியால் பெரிதும் ஆளாவது கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளும் பெண்களும் சிறார்களுமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
இப்படியான மக்களுக்கு இணைய வசதியோ, அல்லது கௌரவமான மருத்துவ வசதிகளோ, அல்லது அவர்களை காப்பாற்றும் விஷமுறிவு மருந்துகளோ கிடைக்காத நிலையுமே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. 
http://apps.who.int/bloodproducts/snakeantivenoms/database/
நன்றி  BBC

கருத்துரையிடுக