ஹார்டுவேர் இன்னோக்கள்


ஹார்டுவேர் இன்னோக்கள்

மென்பொருள் சமூகத்தில் மட்டுமல்லாது, வன்பொருள் சமூகத்திலும் ஏட்டிக்குப் போட்டியாய் வெளியாகும் தயாரிப்புகள், இன்னும் ஹார்டுவேர் பக்கத்திலும் இன்னோவேட்டிவ் எண்ணங்கள் குறைந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. எந்த ஒரு தயாரிப்பை பார்த்தவுடனும் ”அட இது நல்ல ஐடியாவாக இருக்குதே” என ஒருவருக்கு சொல்லத் தோன்றினால் அது அல்மோஸ்ட் எல்லோரையுமே அப்படி சொல்ல வைப்பதாக இருக்கும். அங்கே நாம் இன்னோவேசனை அடையாளம் காட்டலாம். ஏன் நமக்கு கூட முன்னமே இப்படி ஒரு ஐடியா தோன்றியதில்லை என்ற புழுக்கமும் கூடவே தோன்றும். அப்படி சமீபத்தில் அறிய வந்த ஒரு ஹார்டுவேரின் பெயர் Klipsch LightSpeaker. உங்கள் வீடு முழுமையையும் இன்னிசை மழையால் நிறைக்கவேண்டுமென வைத்துக்கொள்வோம். அதற்கு அறைதோறும் ஸ்பீக்கர்களை நிறுவ பவர் கேபிள்களையும், ஆடியோ கேபிள்களையும் அங்கே இங்கே என இழுத்தது அந்தகாலம். ஆணியும் அடிக்கவேண்டாம் ஒன்னும் அடிக்க வேண்டாம். வீட்டு பல்போடுகூடி ஒட்டியே வருகின்றது இந்த மினிஸ்பீக்கர்கள். ஒரு லைட் பல்பை மோட்டில் மாட்டிவிட்டால் போதும், அந்த அறையில் ஸ்பீக்கரையும் மாட்டிவிட்டதாக அர்த்தம். பின் எங்கோ ஒரு மூலையில்wireless transmitter-ஐ அமைத்து இசையை ஓட விட, அதை நம் கையிலிருக்கும் ஒரு ரிமோட் கொண்டு நிர்வகிக்கலாம். இல்லம் பூராவும் சானல் மியூசிக், ஒரு குத்தலும் குடைச்சலும் இல்லாமல். என்ன இப்போதைக்கு விலை கொஞ்சம் அதிகம், இரண்டு லைட் ஸ்பீக்கர்கள் அறுநூறு டாலர்கள். சைனாக்காரன் அதையும் பார்த்துக்கொள்வான்.

என்னுடைய இப்போதைய பேவரைட் டிரான்ஸ்மிட்டர் iPhone Fm transmitter.பத்து டாலருக்கெல்லாம் ஈபேயில் கிடைக்கின்றது.ஐபாட்/ஐபோன் இசையை என் காரில் கேட்க அது வசதி செய்து தருகின்றது. கோபாலின் டொயோட்டோ காரில் ஏற்கனவே ”ஆடியோ இன்” துளை இருப்பதால் அவனால் நேரடியாக கேபிள் வழி MP3 பிளயர் இசையை கேட்க முடிகின்றது. ஆனால் ஒழுங்காக பிரேக் பிடிக்கிறதாவென கேட்க மறந்துவிட்டேன்.

கார்மெக்கானிக்கல் துறையிலும் இந்த சாப்ட்வேர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முன்பெல்லாம் காரில் பிரேக் பிடித்தால் அத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் நெம்புகோல் நேரடியாகப் போய் கார் டயரை உராய்ந்து நிறுத்தவைக்கும். ஆனால் இப்போது அதெல்லாம் சாப்ட்வேராக்கப்பட்டுள்ளதால் காரில் நீங்கள் பிரேக்கை அழுத்தும் போது உங்கள் பிரேக் பெடலுக்கும், டயருக்கும் இடையே எந்த இழுவைப் பொறியும் இருப்பதில்லை. நீங்கள் பிரேக் பிடிக்கும் போது அங்கே ஒரு மென்பொருளை இயக்குகின்றீர்கள். அது போய் தான் டயரை நிறுத்தச் சொல்லவேண்டும். அங்கு ஒரு நொடி தாமதமெல்லாம் பெரிய விசயமில்லையா? டொயோட்டோவுக்கு கஷ்டகாலம்.

ஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Chargerஎன்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா? நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம்.

கருத்துரையிடுக