பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க


பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.




ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.



தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள்.



தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம்.



இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன்.



வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds.



நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார்.



பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும்.



Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது.



RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது.



Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள்.

அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts .





இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.





இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன்.

ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.

சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம்.



பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.









இனி உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் ஈமெயில் மூலமும் சந்தாதாரர் ஆகி கொள்ளலாம். நீங்கள் இடும் புதிய இடுகைகள் சந்தாதாரரை ஈமெயில் மூலம் சென்றடைந்து விடும். அவர் உங்கள் தளத்துக்கு வர தேவை இல்லை. உங்கள் பார்வையாளர்களை RSS Feeds உபயோகிக்க ஊக்கப்படுத்துங்கள். இந்த எளிய முறை மூலம் உங்கள் வாசகர்கள் பெருகி கொண்டு செல்வார்கள்.

இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன. மேலும் சிலர் பதிவு எழுதுவதை சில காலம் நிறுத்தி விட்டு மீண்டும் துவங்குகிறார்கள். நீங்கள் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுதினாலும் நீங்கள் தக்க வைத்து கொண்டுள்ள வாசகர்களுக்கு உங்கள் படைப்புகளை கொண்டு செல்ல முடியும்.



அல்லது புதிய வலைப்பதிவு எழுதினாலும் Edit Feed Details மூலம் புதிய Feed மாற்றி அளித்து அங்கும் இவர்களுக்கு நம் படைப்புகள் கொண்டு செய்ய வைக்க முடியும். இது போன்ற வசதிகள் நம் வாசகர்களை இழக்காமல் வைத்து கொள்ள உதவும்.



இதன் மூலம் வாசகர்கள் பெருகும் போது நாம் எழுதுவதை நம்மால் எடை போட்டு கொள்ள முடியும். அதிகரித்தால் துணிச்சலாக எழுதலாம் :) . எழுதும் போதும் நம்மை நம்பி சந்தாதாரர் ஆகி உள்ளவர்களுக்காக எழுதுகிறோம் என்று உற்சாகம் பிறக்கும்.



RSS Feed வசதி அளிப்பதால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர மாட்டார்கள். Feed Reader , ஈமெயில் மூலம் வாசித்து இருந்து விடுவார்கள் என்ற தவறான குற்றசாட்டு உண்டு. தளத்திற்கு வந்து படிப்பவர்களை இது பாதிப்பதில்லை. ஒன்றுமில்லாமல் போவதற்கு பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்களையாவது கையில் வைத்து கொள்ளலாமே. Feedburner உங்கள் வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தும். கண்டிப்பாக உபயோகியுங்கள்.



கருத்துரையிடுக