இன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்

 
 

 
இன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம்.

1. அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் (Al Gore) என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோர வில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை?

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், “நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார். தொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்” என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.

2. உங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே. நீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.


மேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.


3. குழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்றிலும் உண்மை அல்ல.


4. இன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.
எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.


தகவல்களைத் தரும் தளங்களின் தன்மை எப்படிப்பட்டவை என்று காண வேண்டும். அரசு, நிறுவனங்கள், அரசு ஆதரவு பெற்ற பொதுவான அமைப்புகளின் தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே அப்படியே எடுத்துக் கொள்ளலாம். புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் தளங்களும் உண்மைச் செய்திகளையே தரும். மற்றவற்றை தீர யோசித்த பின்னரே அல்லது மற்ற தளங்களையும் பார்த்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.


5. இன்டர்நெட் உங்களை கோடீஸ்வரனாக மாற்றும். இன்று இன்டர்நெட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். பல்லாயிரக் கணக்கான டாலருக்கு அதிபதியானேன் என்பதெல்லாம் கதை. இந்த கதைகளைக் கூறி, தளங்களுக்கு இழுத்துச் சென்று நம் பணத்தைப் பறிக்கும் வழிகளாகும். இன்டர்நெட் வழியாக உங்கள் வர்த்தகத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மையே. ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என்பதுவும் உறுதி செய்யப்பட்டதே. ஆனால் அதற்காக இதனை விளம்பரம் மூலம் கூறி உங்களை இழுக்கும் இணைய தளங்கள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கருத்துரையிடுக