எல்.ஜி.யின் முதல் காம்பேக்ட் டச் ஸ்கிரீன் போன்

பொதுவாக டச் ஸ்கிரீன் அல்லது பெரிய திரை என்றிருந்தால், மொபைல் போனின் சைஸ் சற்று அடங்காமல் இருக்கும். ஆனால் நாம் எல்லாருமே சிறிய, கைக்கு அடங்கிய வடிவில் போன் இருப்பதையே விரும்புகிறோம்.
இதனை பன்னாட்டளவில் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் அண்மையில் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
எல்.ஜி – ஜி.டி.510 எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன் 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்டதாக இருப்பது மட்டுமின்றி, சிறிய அளவில் கைக்கு அடக்கமாக உள்ளது. உலகிலேயே இந்த அளவில் டச் ஸ்கிரீன் திரையுடன் அடக்கமான அளவில் இருப்பது இதுதான் என்றும் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பலர் தாங்கள் பயன்படுத்தாத, தங்களுக்குத் தேவையற்ற வசதிகள் இருப்பதனை விரும்பவில்லை என்பதனையும் எல்.ஜி. உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே அதன் அடிப்படையில் அடிப்படையில் தேவைப்படும் சில கூடுதல் வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையற்ற சில வசதிகளை நீக்கியுள்ளது எல்.ஜி.
தற்போதைக்கு இந்த போன் எத்தகைய வசதிகளைக் கொண்டு இயங்குகிறது என வந்துள்ள வீடியோ காட்சிகள் தான் நமக்கு இந்த போனைக் காட்டியுள்ளன. இதில் மல்ட்டி மீடியா அம்சங்கள் அனைத்தும் உள்ளன.

உள் நினைவகம் 8 ஜிபி. இதனால் திரைப்படங்களையும், பாடல்களையும் அதிக எண்ணிக்கையில் பதிந்து இயக்கலாம். இதில் 3 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கத்தையும் இதில் மேற்கொள்ளலாம்.

இதில் ஒவ்வாத ஒன்று என்று சொன்னால், அது அழைப்புகளை எடுப்பதற்கும், முடிப்பதற்கும் ஒரே ஒரு பட்டன் தந்திருப்பதுதான்.

கீ பட்டன்களுக்குக் கீழாக சிகப்பு அல்லது பச்சை வண்ணத்தில் போனின் செயல்பாட்டினை அறிவிக்கும் வகையில் விளக்கொளி கிடைக்கிறது. அனைத்து எல்.ஜி. டச் ஸ்கிரீன் போன்களில் உள்ள எஸ்–கிளாஸ் யூசர் இன்டர்பேஸ் இதில் தரப்படவில்லை.

அதுவும் ஒரு சிறப்புதான். மற்ற நாடுகளில் அக்டோபர் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் இந்த போன் அடுத்து இந்தியாவிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அப்போது இதன் விலை தெரியவரும்

கருத்துரையிடுக